“மீனவர்களை தொழில்முனைவோராக்க முன்முயற்சி எடுக்கிறோம்” - ஶ்ரீதர் வேம்பு தகவல்

By கரு.முத்து

நாகப்பட்டினம்: விருப்பமுள்ள மீனவர்களை, தொழில்முனைவோராக்க, முன் முயற்சி மேற்கொண்டு வருவதாக சோஹோ நிறுவனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

சோஹோ பன்னாட்டு நிறுவனம் சார்பில் நாகை மாவட்டம் நம்பியார் நகர் மற்றும் ஆரியநாட்டுத் தெரு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் அந்நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, கோயில், சமுதாயக் கூடங்கள் மற்றும் வீடுகள் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இதில், நாகை ஆரியநாட்டுத் தெரு மீனவ கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மூகாம்பிகை கோயிலின் கட்டுமானப் பணிகளை நேற்று இரவு சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பார்வையிட்டார். கோயிலுக்கு வந்த ஸ்ரீதர் வேம்புவை அப்பகுதி மீனவர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கோயிலில் நடைபெற்று வரும் ராஜகோபுர பணிகள் குறித்து ஸ்ரீதர் வேம்பு கேட்டறிந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "நாட்டின் வளர்ச்சியும், எதிர்காலமும் குழந்தைகளின் கைகளில் தான் உள்ளது. ஆன்மிகமும், அறிவாற்றலும் வளர ஆலயங்களை கட்டி எழுப்புவதுடன், சமுதாயக் கூடங்களையும் உருவாக்கி வருகிறோம். மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள, புரதச்சத்துள்ள மீன்களை, மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய முன் வர வேண்டும். இது குறித்து ஆர்வமும், விருப்பமும் உள்ள மீனவர்களை தொழில் முனைவோராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் செய்வதை தர்ம காரியமாக பார்க்காமல், மீனவர்கள் சொந்தக்காலில் நிற்க இப்போதே அதனை முறைப்படுத்தி வருகிறோம்" என்று ஸ்ரீதர் வேம்பு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE