அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சம்: 681 பில்லியன் டாலராக உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆகஸ்ட் 23-ம்தேதி நிலவரப்படி, 681.68 பில்லியன் டாலராக உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரையில் 60 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

2023-ம் ஆண்டில் 58 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்தது. 2022-ம் ஆண்டிலோ அந்நிய செலாவணி கையிருப்பில் 71 பில்லியன் டாலர் குறைந்தது. நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளை நிலையாக வைத்திருப்பதில் அந்நிய செலாவணி கையிருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தால், நாட்டின் பொருளா தாரம் நெருக்கடிக்கு உள்ளாகும்.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் 23-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 7 பில்லியன் டாலர் அதிகரித்து 681 பில்லியன் டாலராக உச்சம் கண்டது. முந்தைய வாரத்தில் 4.5 பில்லியன் டாலர் அதிகரித்து 674 பில்லியன் டாலராக உயர்ந்தது.

தங்க இருப்பு: ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவரப்படி, மொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் அந்நிய நாணய சொத்துகள் 597 பில்லியன் டாலராகவும், தங்க இருப்பு 61 பில்லியன் டாலராகவும் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE