உலக அளவில் பணப் பரிவர்த்தனையில் முன்னணி: யுபிஐ மூலம் ஏப்ரல் - ஜூலை வரை ரூ.81 லட்சம் கோடி பரிவர்த்தனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் யுபிஐ மூலம் ரூ.81 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் இதுவரையில் இல்லாத அளவில் ரூ.20.6 லட்சம் கோடி யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில், பே பால், சீனாவின் அலிபே, பிரேசிலின் பிக்ஸ்ஆகியவற்றைவிட யுபிஐ மூலம்அதிக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் மொத்தப் பணப் பரிவர்த் தனைகளில் 40 சதவீதம் டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. பே செக்யூர் அமைப்பு வெளியிட்ட விவரங்களின்படி, யுபிஐ மூலம் வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 58 சதவீதம் அதிகம் ஆகும்.

பே செக்யூர் அமைப்பு உலக அளவில் 40 டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களை ஒப்பிட்டு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், உலக அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தளங்களில் யுபிஐ முன்னணி வகிக்கிறது.

கடந்த ஜூன் மாதத்தில் யுபிஐமூலம் 1,400 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கை 10,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்ப்பதாக என்பிசிஐ அமைப்பின் சிஇஓ திலீப் அஸ்பே தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாடுகளிலும் யுபிஐ பரிவர்த்தனைக்கான கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கியுள்ளது. யுபிஐ சேவையில் குரல் வழி பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இனி வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண்ணை தட்டச்சு செய்ய தேவையில்லை. குரல் மூலமாகவே அவற்றை உள்ளீடு செய்து பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE