‘ரூ.11.6 லட்சம் கோடி சொத்து’ - இந்திய செல்வந்தர் பட்டியலில் அம்பானியை முந்திய அதானி!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2024-ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஹுருன் இந்தியா நிறுவனம் (Hurun India Rich List) கடந்த சில வருடங்களாக இந்திய பணக்காரர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் 2024-ஆம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பம் ரூ.11.6 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தை பிடித்துள்ளனர். முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.10.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை வகித்துள்ளது. இதுவரை முதலிடம் வகித்து வந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி, கவுதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சிவ் நாடார் மற்றும் அவரது குடும்பம் ரூ.3.14 லட்சம் கோடி சொத்துகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் சைரஸ் எஸ் பூனவல்லா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) குடும்பம் (ரூ.2.89 லட்சம் கோடி) மற்றும் சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் ஷங்வி (ரூ.2.49 லட்சம் கோடி) ஆகியோர் உள்ளனர். நிராஜ் பஜாஜ் மற்றும் குடும்பத்தினர் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்ததுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, சிவ் நாடார், சைரஸ் எஸ்.பூனாவாலா, கோபிசந்த் ஹிந்துஜா, ராதாகிருஷ்ணன் தாமணி ஆகியோர் தொடர்ந்து டாப் 10 பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர் என ஹுருன் தெரிவித்துள்ளது.

மேலும், 2024 ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில் இளம் பில்லியனராக ஜெப்டோ நிறுவனத்தின் கைவல்ய வோரா (21 வயது) இணைந்துள்ளார். அவருடைய இணை நிறுவனர் ஆதித் பலிசா (22) மிக குறைந்த வயதில் பணக்காரர் ஆனவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலில், இந்தி நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக ரூ.7,300 கோடி சொத்து மதிப்புடன் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE