விலையில் மாற்றமின்றி பயணிக்கும் தங்கம் - வர்த்தகர்கள் சொல்வது என்ன?

By செ.ஆனந்த விநாயகம்

சென்னை: தங்கம் விலையில் மாற்றமின்றி இன்று பவுன் ரூ.53,720-க்கு விற்பனையாகிறது. இவ்வாறு விலை மாற்றமில்லாமல் காணப்படுவதற்கு சந்தை நிலையாக இருப்பதே காரணம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.

பின்னர் கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதன் பின்னர் ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் காலை பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகலில் விறுவிறுவென குறைந்து ரூ.52,400-க்கு விற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படுகிறது. இந்நிலையில், இன்று விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு சவரன் தங்கம் ரூ.53,720-க்கும், கிராம் ரூ.6,715-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.57,360-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றமின்றி கிராம் ரூ.93.50 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.93,500-ஆகவும் உள்ளது.

அதேநேரம், கடந்த 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தங்கத்தின் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது. இந்த நாட்களில் சந்தை விடுமுறை வந்தபோதும், தொடர்ச்சியாக விலையில் சிறிதளவு கூட மாற்றமில்லை. அதன் பின்னர் நேற்று மாறிய தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை. இதேபோல் 27-ம் தேதி முதல் இன்று வரை வெள்ளி விலையிலும் மாற்றமில்லை.

இது தொடர்பாக சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “விலை மாற்றமின்மைக்கு காரணம் ஏதுமில்லை. காரணி பொருளாதாரம், சந்தை போன்றவற்றில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்போது தான் விலையில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு விலை மாறாமல் இருந்தால் சந்தை நிலையாக இருக்கிறது என பொருள் கொள்ளலாம்.

அதேநேரம், அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவின் பெடரல் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது. இதில் ஏற்படும் முடிவைப் பொறுத்து தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும். வட்டி விகிதத்தை குறைத்தால் தங்கத்தின் விலை உயரும். வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கத்தின் விலை குறையும்” என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE