ந
ம் மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே ஸ்க்ரீனில் படம் பிடித்து காட்டும் ‘செரிப்ரஸ்கோப்’ கருவி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பயப்படாதீர்கள், அப்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று இல்லாத கற்பனை கருவிக்கு பெயர் வைத்திருக்கிறார்கள் சமூக உளவியலாளர்கள். இவர்களும் பாவம், மனித சுபாவத்தை புரிந்துகொள்ள பல கருவிகளை, டெக்னிக்குகளை பிரயோகித்து வருகிறார்கள். ஆனால் மனித மனதை அப்படியே படம் பிடித்து காட்டும் வழிமுறைதான் இதுவரை இல்லை. மனித எண்ணங்கள் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான, குழப்பமான சமாச்சாரங்கள். நம் எண்ணங்கள் பல நமக்கே புரிவதில்லை. நமக்குள் தோன்றும் எண்ணங்களை சமயங்களில் நாமே அறிவதில்லை. அப்படியே அறிந்தாலும் அதில் பலவற்றை மற்றவரிடம் சொல்வதுமில்லை.
மனிதர்களின் ஆழ்மனதை, அதிலுள்ள எண்ணங்களை, வேறு யாரிடமும் கூறாத ரகசியங்களை அவர்களிடமிருந்தே கண்டெடுக்கலாம் என்று கிளம்பியிருக்கிறார் ‘செத் ஸ்டீஃபன்ஸ்-டேவிடோவிட்ஸ்’. கடந்த ஏழெட்டு வருடங்களாக இதைத் தான் முழுநேர தொழிலாகக் கொண்டிருக்கிறார். இவர் ஒரு இன்டர்நெட் டேட்டா எக்ஸ்பர்ட். தினம் இன்டர்நெட்டில் பயணிக்கும் மக்களின் டிஜிட்டல் பாதையை கண்காணிப்பவர். முக்கியமாக ‘கூகுளி’ல் மக்கள் தேடும் விஷயங்களை பிரித்து மேய்ந்து ஆராய்பவர்.
அருகில் யாரும் இல்லாத தனிமையில் கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் நம் சந்தேகங்களை, ஆசைகளை, கனவுகளை, வெறுப்புகளை, குழப்பங்களை, பயங்களை கேள்விகளாகக் கேட்கிறோம். நம் மனதின் கேள்விகளை கூகுளின் வெள்ளை ஸ்க்ரீனின் செவ்வக வடிவ பாக்ஸில் உள்ளீடு செய்யும் போது நம் மனதை படம்பிடித்துக் காட்டுகிறோம் என்பதை நாம் உணர்வதில்லை. `உடம்பு இளைப்பது எப்படி’, ‘மகனின் வருங்காலம்’, ‘காதல் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி’, ‘மனைவி நடத்தையை கண்காணிப்பது எப்படி’ என்று நம் குழப்பம் முதல் குமுறல்கள் வரை சப்பை கேள்விகள் முதல் சம்போக சமாச்சாரம் வரை கூகுளில் நாம் தேடும் விஷயங்கள் கூட்டி, கழித்து அதிலிருந்து மனிதர்கள் மன ஓட்டத்தை ஆய்வு செய்வது தான் ஸ்டீஃபன்ஸின் வேலை!
கூகுளில் நாம் கேட்கும் கேள்விகளில் பல மற்றவரிடம் கேட்காத, கேட்க வெட்கப்படும், கேட்க தைரியமில்லாத கேள்விகள் என்பதை நினைவில் கொள்க. நான் மட்டும் தானே கேட்கிறேன் என்றும் நினைக்காதீர்கள். உங்களைப் போல் நான், அவர், அவள், அவர்கள் என்று தினம் உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்கள் கூகுளில் தங்கள் மனதை திறந்து கேள்விகளை கொட்டு கிறார்கள்.
அனுதினம் நாம் இன்டர்நெட்டில் பதியச் செய்வது சுமார் 2.5 மில்லியன் ட்ரில்லியன் டேட்டா. இதில் எத்தனை சைபர்கள் என்பதை `சைபர்’ க்ரைம் நிபுணரிடம் தான் கேட்கவேண்டும். அத்தனை டேட்டாவும் நம்மை அறிந்துகொள்ள, நம் எண்ணங்களை புரிந்துகொள்ள நாமே விரும்பித் தரும் துப்புக்கள். அந்த துப்பிலிருந்து நம்மை நாம் அறிந்ததை விட இன்னமும் அறிந்துகொள்ள முடியும் என்கிறார் ஸ்டீஃபன்ஸ்.
இவர் எழுதியிருக்கும் புத்தகம் ‘Everybody Lies’. யாரிடமும் சொல்லாத, ஆனால் மனிதர்களின் தேடல்கள் மூலமே மனித மனதை ஆய்வு செய்வதைப் பற்றிய அட்டகாசமான புத்தகம்.
தகவல் தேடுபவர்களின் தகவலே ஒரு தகவல் என்கிறார் ஸ்டீஃபன்ஸ். நாம் உலகை புரிந்துகொள்ள கூகுள் தொடங்கப்பட்டாலும் நம்மை புரிந்துகொள்ள கூகுள் டேட்டா பயன்படுகிறது என்பதுதான் அதில் விசேஷம். யோசித்து பாருங்கள். கூகுளில் தேடும் கேள்விகள் மற்றவரிடம் கேட்காத கேள்விகளாக இருக்கலாம். அக்கேள்விகளை கூட்டி கழித்து பெருக்கி அதில் டேட்டா அறிவியலை சேர்த்து ஆய்வு செய்தால் மனிதர்களின் நடத்தை முதல் அவர்கள் ஆசைகள் வரை, பயங்கள் முதல் அவர்கள் கனவுகள் வரை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அதைத்தான் செய்கிறார் ஸ்டீஃபன்ஸ்.
கம்ப்யூட்டரின் தனிமையில் நம் சுய ரூபத்தை, நம்முள் இருக்கும் அந்த இருட்டு மனிதனை வெளிப்படுத்துகிறோம். நம் எண்ணங்களை எழுதுகிறோம். நம் பாரத்தை இறக்குகிறோம். கூகுளில் உலக மக்கள் தேடும் தகவல்களிலிருந்து அவர்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம் என்கிறார் ஸ்டீஃபன்ஸ்.
தேடும் விஷயங்களிலிருந்து அவர்களுக்கு என்ன வேண்டும், என்ன செய்கிறார்கள் என்பதை அறிவதோடு உண்மையிலேயே அவர் கள் யார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார். பொதுவாகவே டாக்டர்களிடம், நண்பர்களிடம், சமயங்களில் நம்மிடமே பொய் சொல் கிறோம். ஆனால் கூகுளில் நாம் கூறுவதெல்லாம் உண்மை, கேட் பதெல்லாம் சத்தியம், தேடுவதெல்லாம் நிஜம்!
சமூக ஆய்வுகளில் ஆய்வாளர்கள் கேள்விகளுக்கு உண்மையான பதில் கூற தயங்குகிறோம். ஆனால் கூகுளில் யாருக்கு தெரியப்போகிறதென்று மற்றவரிடம் கேட்கத் தயங்கும் விஷயங்களை, கேள்விகளை கூட பயமின்றி கேட்கிறோம். கூகுளில் ஆயிரக்கணக்காண தேடல்கள் பதிவதை விட அதிலிருந்து ஆழமான உண்மைகள் தெரிவது தான் கூகுள் டேட்டாவின் மகாத்மியம்!
ஒரு சின்ன உதாரணம் கொண்டு இதை விளக்குகிறேன். அமெரிக்க சமூக ஆய்வு ஒன்றில் பெண்கள் வருடத்திற்கு 55 முறை ‘பலான’ மேட்டர் செய்ததாகவும் அதில் 16% ஆணுறை பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்கள். இதை கணக்கிட்டால் வருடத்திற்கு அமெரிக்காவில் 1.1 பில்லியன் ஆணுறை பயன்படுத்தப்பட்டது என்று அர்த்தமாகிறது. ஆனால் ஆண்களிடம் ஆய்வு செய்த போது அவர்கள் 1.6 பில்லியன் ஆணுறைகள் உபயோகித்ததாக கூறினர். கிட்டத்தட்ட 500 மில்லியன் இடிக்கிறதே. யார் பொய் சொல்கிறார்கள்? ஆண்களா? பெண்களா?
இருவருமே என்கிறது விற்பனை டேட்டாவை கணக்கிடும் கம்பெனியான ‘நீல்சன்’. அமெரிக்காவில் வருடத்திற்கு 600 மில்லியன் ஆணுறைகள்தான் விற்கப்படுகின்றன என்று புள்ளி விவரத்தோடு விளக் குகிறது. என்ன நடக்கிறது என்பது புரிகிறதா? பெண்கள், ஆண்கள் இருவருமே சப்ஜாடாய் பொய் சொல்கிறார்கள். யார் அதிகம் சொல்கிறார்கள் என்பதில் தான் வித்தியாசம்!
ஆழ்மனது பற்றிய தகவல் சேகரிப்பில் கூகுள் தேடல்களிலிருந்து பெறப்படும் தகவல் போல் இதுவரை எந்த ஆய்வுகளிலிருந்தும் இதுவரை யாரும் பெற்றதில்லை என்று அடித்துக் கூறுகிறார் ஸ்டீஃபன்ஸ்.
`அய்யோ’ கூகுளில் நான் தேடுவதை யாரோ பார்க்கிறார்களா என்று பயப்படாதீர்கள். நீங்கள் தேடுவதை யாரும் உங்கள் ஃபோட்டோ, ஆதார் கார்ட்டை வைத்துக்கொண்டு கண்காணிப்பதுமில்லை. தாங்கள் கண்டதை கர்ம சிரத்தையாய் உங்கள் வீட்டு கதவை தட்டி உங்கள் மனைவியிடம் சொல்லப்போவதுமில்லை.
நம் உள்ளீடுகளை மொத்தமாய் கூட்டி அந்த மொத்தத்தை கணக்கிட்டு ஆய்வு செய்கிறார்கள். உங்கள் தேடலை உங்கள் பெயர் கொண்டு யாரும் பார்ப்பதில்லை. பயப்படா மல் கூகுளில் தேடுங்கள். நம் கேள்வி களுக்கு, சந்தேகங்களுக்கு கூகுளை விட்டால் வேறு நாதி ஏது. மாறி வரும் சூழலில் இனி மாதா, பிதா, கூகுள், தெய்வம் என்றாகிவிட்டதே!
`நுனிப்புல் தான் மேய்திருக்கிறேன், மொத்த கூகுள் டேட்டாவை அலச ஒரு ஆராய்ச்சி படையே தேவைப்படுகிறது’ என்கிறார் ஸ்டீஃபன்ஸ். இதுவரை மனிதர்களை புரிந்துகொண்டதை விட இன்னமும் புரிந்துகொள்ள முடியும், புரிந்துகொள்ளப் போகிறோம் என்கிறார். `சமூக அறிவியலுக்கு புதிய பாதை அமைத்துத் தந்திருக்கிறார் ஸ்டீஃபன்ஸ்’ என்கிறார் ஸ்டீஃபன்ஸ் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கும் கனடா நாட்டு அறிவாற்றல் உளவியலாளர் (Cognitive Psychologist) ’ஸ்டீவன் பிங்கர்’.
தண்ணீரில் நாம் கண்டதை விட இன்னமும் உண்டு என்று காட்டியது மைக்ராஸ்கோப். அண்டசராசரத்தில் நாம் பார்த்ததை விட இன்னமும் உண்டு என்று காட்டியது டெலெஸ்கோப். மனித சமுதாயம் பற்றி நாம் தெரிந்துகொண்டதை விட இன்னமும் உண்டு என்று காட்டப் போகிறது கூகுளும் டிஜிட்டல் டேட்டாவும்.
இங்கு நான் தந்திருப்பது ஸ்டீஃபன்ஸ் ஆய்விலிருந்து சின்ன சாம்பிள் தான். நேரம் வரும் போது மேலும் எழுதுகிறேன். இன்றைக்கு இது போதும். இதற்கே உங்களுக்கு கதி கலங்கியிருக்கும்! தன்னை தானே காட்டி மனித மனதை காண உதவும் கூகுள் டிஜிட்டல் கண்ணாடி இருக்கும் போது இனி யாருக்கு வேண்டும் செரிப்ரஸ்கோப்!
satheeshkrishnamurthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
5 days ago