சிங்கப்பூர் நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சிங்கப்பூரின் முன்னணி உலகளாவிய நிறுவனங்களான டிபிஎஸ் வங்கி, தெமாசெக் ஹோல்டிங்ஸ், ஓமர்ஸ் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளுடன் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்திய - சிங்கப்பூர் அமைச்சர்களின் இரண்டவது வட்டமேஜை (ISMR-ஐஎஸ்எம்ஆர்) கூட்டம் நாளை (ஆக.26) சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ரயில்வே, தகவல் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தப் பயணத்தின்போது, சிங்கப்பூர் தலைவர்களுடனும் அமைச்சர்களுடனும் இந்திய அமைச்சர்கள் கலந்துரையாடுவார்கள்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை டிபிஎஸ் வங்கி, தெமாசெக் ஹோல்டிங்ஸ், ஓமர்ஸ், உள்ளிட்ட சிங்கப்பூரின் முன்னணி உலகளாவிய நிறுவன பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தியாவின் வளர்ந்து வரும் சந்தை வாய்ப்புகள், அதன் வளர்ச்சிப் பாதை ஆகியவற்றைப் பயன்படுத்தி, இருதரப்பு வர்த்தகம் - முதலீட்டை அதிகரிப்பதற்கான உத்திகளை அமைச்சர் ஆராய்ந்தார்.

ஐஎஸ்எம்ஆர் என்பது இந்தியா - சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளுக்கு ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்த நிறுவப்பட்ட ஒரு தனித்துவமான நடைமுறையாகும். அதன் முதல் கூட்டம் 2022, செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்றது. 2-வது கூட்டம், நாளை நடைபெறவுள்ளது. இது இரு தரப்பினரும் தங்களது ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்யவும், அதை மேலும் உயர்த்தவும், விரிவுபடுத்தவும் புதிய வழிகளை அடையாளம் காண இது உதவும்.

இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. 2023 - 24 -ம் ஆண்டில், சிங்கப்பூர், இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) மிகப்பெரிய ஆதாரமாக இருந்தது. இது 11.77 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏப்., 2000 முதல் மார்ச் 2024 வரை சிங்கப்பூரிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டின் ஒட்டுமொத்த முதலீடு சுமார் 159.94 பில்லியன் டாலராகும்.

இருதரப்பு வர்த்தகத்தில், சிங்கப்பூர் 2023 - 24 ஆம் ஆண்டில் இந்தியாவின் 6-வது பெரிய உலகளாவிய வர்த்தக கூட்டு நாடாக இருந்தது. மொத்த வர்த்தகம் 35.61 பில்லியன் டாலர். இது ஆசியான் உடனான இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 29 சதவீதமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE