செசல்ஸ் நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: செசல்ஸ் நாட்டில் தொழில் தொடங்க இந்தியர்களுக்கு, தூதரக அதிகாரி லலாதியானா அக்கோச் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா மற்றும் செசல்ஸ் நாடுகளுக்கு இடையே பொருளாதார, கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையிலான இந்திய காமன்வெல்த் வர்த்தக மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்திய காமன்வெல்த் வர்த்தக கவுன்சிலின் கவுரவ வர்த்தக ஆணையர் கருணாநிதி வைத்தியநாதசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கான செசல்ஸ் நாட்டின் தூதரக அதிகாரி லலாதியானா அக்கோச் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

செசல்ஸ் நாட்டில் தொழில் தொடங்க ஏதுவாக அனைத்து வசதிகளும், சூழ்நிலைகளும் உள்ளன. ஓர் நிலையான அரசியல் சூழல் நிலவுவதால், வெளிப்படையான சட்ட கட்டமைப்பு மற்றும் பொருளாதார கொள்கைகள் மூலம் வலுவான வணிக வளர்ச்சியை செசல்ஸ் வழங்குகிறது. இதனை இந்திய தொழில் முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் அதிகளவில் பார்வையாளர்களையும், வணிகர்களையும் ஈர்ப்பதற்காக இரு நாடுகளுக்கு இடையே இண்டிகோ விமான சேவை, இலவச விசா, 150-க்கும்மேற்பட்ட நாடுகளுக்குள் நுழைய பாஸ்போர்ட் வசதிகளும் வழங்கப்படுகின்றன. இந்திய காமன்வெல்த் வர்த்தக கவுன்சில் இந்த செயல்முறையை தொடங்குவதற்காக அக்டோபர் மாதம் செசல்ஸ் நாட்டுக்கு செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து இந்தியா - செசல்ஸ் நாடுகளிடையே தற்போதைய நிலை பற்றிய ஆழமான பகுப்பாய்வை வழங்கும் ‘இந்தியா -செசல்ஸ் அறிக்கை 2024’-ஐ அவர் வெளியிட்டார். பின்னர் சென்னை ஐஐடி உட்பட நிறுவனங்களுடன் வர்த்தகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்வில் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிஃப் இக்பால், இந்திய காமன்வெல்த் கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஜெ.ரங்கநாதன் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE