ஐபோன் 16 உட்பட பல்வேறு ஆப்பிள் சாதனங்கள் வரும் செப்.10-ம் தேதி அறிமுகமாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் செப்டம்பர் 10-ம் தேதி அன்று ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 வரிசை போன்கள் உட்பட ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் நடத்துகின்ற மிகப்பெரிய நிகழ்வாக இது அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டும் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிகழ்வின் நேரம் குறித்த தகவல் வெளியாகவில்லை. வரும் செப்.20-ம் தேதி அன்று புதிய ஐபோன் மாடல்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.

ஐபோன் 16 மாடலை பொறுத்தவரையில் அதன் புரோ மாடல்களில் பெரிய திரை மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய கேமரா அம்சம் போன்றவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆப்பிள் ஏஐ அம்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 மாடலுடன் இந்த மாடல் போனில் ஒப்பீட்டளவில் பெரிய வேறுபாடுகள் இருக்காது என்று தகவலும் வெளியாகி உள்ளது. இதோடு வாட்ச் சீரிஸ் 10 மாடல், ஏர்பாட் போன்றவையும் அறிமுகமாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE