ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் சீனாவை முந்தியது இந்தியா!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியா சீனாவை முந்தியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதற்காக, இரு நாடுகளுக்கு இடையே குழாய் பதிக்கப்பட்டு அதன்மூலமாக சீனா இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை சீனா நாள் ஒன்றுக்கு 1.76 மில்லியன் பீப்பாய்களை இறக்குமதி செய்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஜூலையில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 2.07 மில்லியன் பீப்பாய்களை இறக்குமதி செய்துள்ளது. இரு நாடுகளின் இறக்குமதி தரவுகள் இதனை தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதியில் ரஷ்ய கச்சா எண்ணெய் 44% ஆக இருந்தது. இது நாள் ஒன்றுக்கு 2.07 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவாகும். ஜூன் மாதத்தை விட இது 4.2% அதிகம். கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் 12% அதிகம்.

ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் இரண்டாவது நாடாக ஈராக்கும், மூன்றாவது நாடாக சவுதி அரேபியாவும், நான்காவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளன. ஜூலை மாதம் இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 40 சதவீதம் ஈராக், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இது ஜூன் மாதம் 38% ஆக இருந்தது.

2022 பிப்ரவரியில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்தது. இதன் காரணமாக ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்த மேற்கத்திய நாடுகள், தங்கள் எரிசக்தி கொள்முதலையும் குறைத்தன. இதையடுத்து, தள்ளுபடி விலையில் ரஷ்யா, இந்தியாவுக்கு கஞ்சா எண்ணெயை விற்கத் தொடங்கியது. இதன் காரணமாக ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் அதிகரித்தது. முக்கியமாக கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE