ஹைதராபாத்தில் முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் ஆர்வம் - நிறுவன தலைவர் உடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு-வை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, ஹைதராபாத்தில் முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் ஆர்வமாக உள்ளதாக யங் லியு தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரைச் சந்தித்தார்.

யங் லியு உடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "ஹான் ஹை டெக்னாலஜி குழுமத்தின் (ஃபாக்ஸ்கான்) தலைவரான யங் லியுவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எதிர்காலத் துறைகளில் இந்தியா வழங்கும் அற்புதமான வாய்ப்புகளை நான் எடுத்துரைத்தேன். கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இந்தியாவில் அவர்களின் முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என தெரிவித்துள்ளார்.

யங் லியு உடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி, "ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியுவை புதுடெல்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பின்போது பயனுள்ள விவாதங்கள் நடந்தன. தெலங்கானாவை உலகளாவிய அங்கீகாரத்துடன் ஒரு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான உத்தியின் ஒரு பகுதியாக, எலக்ட்ரானிக்ஸ் துறையில் உலகின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான Foxcon தனது உற்பத்திக் கிளையை ஹைதராபாத்தில் தொடங்க அழைப்பு விடுத்தேன்.

இந்த லட்சியத் திட்டம் விரைவாக பலனளிப்பதை உறுதி செய்வதற்காக இரு தரப்பு பிரதிநிதிகளும் தொடர்ந்து தொடர்புகொள்வார்கள். யங் லியு விரைவில் ஹைதராபாத்திற்கு வருவார். அனைவருடனும் பகிர்ந்து கொள்ள சில உற்சாகமான செய்திகள் விரைவில் கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு, "முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டியின் அணுகுமுறை, குறிப்பாக நான்காவது நகரத் திட்டத்தின் வளர்ச்சிக்கான அவரது திட்டங்கள் பாராட்டுக்குரியவை. ஹைதராபாத் நகரம் தொழில்துறை மற்றும் சேவை துறைகள் உட்பட அனைத்து துறைகளிலும் விரிவடையும் சாத்தியம் உள்ளது" என தெரிவித்ததாகவும், ஹைதராபாத்தில் முதலீடு செய்வதில் அவர் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE