கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? - கணபதி ராஜ்குமார் எம்.பி புதிய தகவல்

By இல.ராஜகோபால்

கோவை: “கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த நிலங்களை ஒப்படைப்பது தொடர்பாக விரைவில் நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார்,” என்று கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் ஆலோசனை கமிட்டி கூட்டம் இன்று (ஆக.14) நடந்தது. இதற்கு கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தலைமை வகித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் உள்ளிட்டோர் பங்கேற்று கலந்துரையாடினர்.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கணபதி ராஜ்குமார் கூறியது: “மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதற்கேற்ப விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த நிலங்களை ஒப்படைப்பது தொடர்பாக விரைவில் முதல்வர் ஸ்டாலின் நல்ல செய்தியை அறிவிப்பார். தேர்தலின் போது கோவை பொறுப்பாளராக பணியாற்றிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் கோவை விமான நிலைய வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை அரசு சார்பில் செய்து கொடுக்க மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது: “கோவை விமான நிலையம் தற்போது முழு கொள்ளவுடன் செயல்படுகிறது. விரிவாக்கத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டியது அவசியம். மொத்தம் உள்ள 627 ஏக்கரில் 468 ஏக்கர் பட்டா நிலம். இதில் 97 சதவீத நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்துள்ளன. தமிழக அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்தது. மீதமுள்ள 3 சதவீத பணிகளும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக தாமதமாகிறது. விரைவில் அந்த நிலங்களும் ஆர்ஜிதம் செய்யப்படும். பட்டா நிலங்களை தவிர்த்து உள்ள முப்படைகளுக்குச் சொந்தமான நிலங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தும் போது இருகூர், சின்னியம்பாளையம் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எம்.பி-யின் ஆலோசனையின் பேரில் கூடுதலாக சிறிது நிலத்தை ஆர்ஜிதம் செய்து சர்வீஸ் சாலை அமைத்துத் தர நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது, என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE