மாலத்தீவில் யுபிஐ சேவையை அறிமுகம் செய்கிறது இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் யுபிஐ சேவை தற்போது மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக மாலத்தீவு சென்ற நிலையில், அந்நாட்டில் யுபிஐ சேவை அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து ஜெய்சங்கர் கூறுகையில், “டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா பெரும் புரட்சி செய்துள்ளது. இன்றுஉலகில் நிகழும் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நிகழ்கிறது. இத்தகைய கட்டமைப்பை மாலத்தீவில் அறிமுகப்படுத்த தற்போது ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். விரைவில் மாலத்தீவில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். இது மாலத்தீவின் சுற்றுலாத் துறை வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு செலுத்தும்” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த யுபிஐ, நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் பெரும் மாற்றத்தைக் ஏற்படுத்தியது. பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடை வரையில் யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது.

பல நாடுகளில்... வெளிநாடுகளிலும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதுவரையில், ஐக்கிய அரபுஅமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE