தமிழகம் முழுவதும் 100 புதிய அமுதம் அங்காடிகள்: அதிகாரிகள் தகவல்

By கி.கணேஷ்

சென்னை: தமிழகம் முழுவதும் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்கப்பட உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் அமுதம் அங்காடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் வெளிச்சந்தையில் அரிசி, பருப்பு,எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் நோக்கில், நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் மற்றும் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள் மூலம் பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. சுய சேவை சேவைமுறையில் இயங்கும் இந்த அங்காடிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.

தனியார் பல்பொருள் அங்காடிகளுக்கு இணையாக பொருட்களின் விற்பனை நடைபெறும் நிலையில், அமுதம் அங்காடிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால், கூடுதலாக 100 அங்காடிகளை திறக்க தமிழக உணவுத்துறை முடிவெடுத்துள்ளது.தனியார் பல்பொருள் அங்காடிகளின் போட்டியை சமாளிக்கும் வகையிலும், பொதுமக்கள் எளிதில் அணுகும் வசதிகளை கொண்டதாகவும் இந்த அங்காடிகள் அமைக்கப்பட உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதவிர, நியாயவிலைக்கடைகளில் பாமாயில், துவரம்பருப்பு ஆகியவை தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், துவரம்பருப்பு இருப்பு உள்ள நிலையில், கூடுதல் பருப்புக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள அமுதம் அங்காடியை புதுப்பிக்கும் பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று பார்வையிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE