நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்பில் புதிய நடைமுறை அறிமுகம்: வீடு, நில உரிமையாளர்கள் பயனடைவார்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சொத்துகள் தொடர்பான நீண்டகால மூலதன ஆதாய வரி விதிப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார்.

இதன்படி, இண்டெக்சேஷனுடன் கூடிய 20 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரியும், இண்டெக்‌சேஷன் இல்லாத 12.5 சதவீத வரியும் நடைமுறையில் இருக்கும். மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப இதில் ஒன்றை தேர்வு செய்யலாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிலம், வீடு உள்ளிட்ட சொத்துகளை விற்கும் மக்களுக்கு மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஆறுதலாக அமைந்துள்ளது.

நிதி மற்றும் நிதிசாரா சொத்துகளின் விற்பனை மூலம் பெறப்படும் லாபத்துக்கு விதிக்கப்படும் வரி, மூலதன ஆதாய வரி ஆகும். 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நிலம், கட்டிடங்கள் தொடர்பான சொத்துகள் விற்பனை மூலம் கிடைக்கும் நீண்டகால மூலதன ஆதாயத்துக்கான (எல்டிசிஜி) வரி 20 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக குறைக்கப்பட்டு, இண்டெக்சேஷன் முறை நீக்கப்பட்டது. இண்டெக்சேஷன் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒரு சொத்தை தற்போது விற்க நேரிடும்போது, பணவீக்க அடிப்படையில், அந்த லாபத்துக்கு செலுத்த வேண்டிய வரியை கணக்கிடும் முறையாகும். பட்ஜெட்டில் இண்டெக்சேஷன் முறை நீக்கப்பட்டதால் 2001-02 நிதி ஆண்டுக்கு பிறகு சொத்து வாங்கியவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது. அவர்கள் தங்கள் சொத்துகளை விற்கும்போது அதில் கிடைக்கும் லாபத்தில் பெரும் தொகையை அரசுக்கு வரியாக செலுத்தும் நிலை ஏற்பட்டது.

இண்டெக்‌சேஷன் முறை நீக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், நிதி மசோதாவில் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பில் மத்திய அரசு தற்போது திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இதன்படி, மக்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இண்டெக்சேஷன் உடன் கூடிய 20 சதவீத நீண்டகால மூலதன ஆதாய வரி முறை அல்லது இண்டெக்சேஷன் இல்லாத 12.5 சதவீத வரியை தேர்வு செய்யலாம். இந்த திருத்தம் கடந்த ஜூலை 23-க்கு முன்பாக சொத்து வாங்கியவர்களுக்கு பொருந்தும்.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் நேற்று கூறும்போது, “மக்களின் குரலுக்கு செவிசாய்த்துள்ளோம். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தால், மக்களுக்கு எந்த வரி சுமையும் இருக்காது” என்றார்.

ஜன் தன் கணக்குக்கு விலக்கு: வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதற்கு வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நேற்று பதில் அளித்த அவர், ‘‘குறைந்தபட்ச தொகை கட்டுப்பாடு, ஜன் தன் கணக்குகள் மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்கு களுக்கு பொருந்தாது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE