இந்திய பங்கு சந்தையில் ரூ.15 லட்சம் கோடி ஒரே நாளில் இழப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்கு சந்தையில் நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பங்குச் சந்தைகளில் வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. 30 முன்னணி நிறுவன பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

இதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் ஜூலையில் வேலைவாய்ப்பு குறைந்து போனதாக அறிக்கை வெளியானது. இன்டெல், அமேசான் போன்ற பிரபல நிறுவனங்களின் வருமானம், சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. இதுபோன்ற தரவுகள் அமெரிக்காவை மந்த நிலைக்கு இட்டுச் செல்லும் குறியீடாக முதலீட்டாளர்கள் கருதியதால், அது உலகளாவிய பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றமும் பங்கு வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.15.34 லட்சம் கோடி குறைந்து ரூ.441.82 லட்சம் கோடியானது.

டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதேநேரம், எஃப்எம்சிஜி துறையை சேர்ந்த பிரிட்டானியா, ஹெச்யுஎல், நெஸ்லே பங்குகளின் விலை ஏற்றம் கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2,222 புள்ளிகளை இழந்து 78,759 புள்ளிகளிலும், நிஃப்டி 662 புள்ளிகள் குறைந்து 24,055 புள்ளிகளிலும் நிலைபெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE