சிப்காட் வளாகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவுரை

By கி.கணேஷ்

சென்னை: “சிப்காட் வளாகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சிப்காட் சார்பில் புதிய தொழில் பூங்காக்கள் அமைத்தல், தொழில் முதலீடுகள், நிலம் கையகப்படுத்துதல் பணி முன்னேற்றம் மற்றும் தொழிற்பூங்கா கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் சென்னை குடிநீர் வாரிய கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியது: “முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டமான ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை 2030-க்குள் எய்திடும் வகையில் தொழில்துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது.

தொழில் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் தமிழகம் தான் சிறந்தது என்பதை அடையாளப்படுத்த வேண்டும். தமிழகம் தொழில் தொடங்குவதற்கான முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும். முதல்வர் இந்த துறையை தனது கண்காணிப்பில் வைத்துள்ளார். இதற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான தகுந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழகத்தை தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக அடையாளப்படுத்துவது அலுவலர்களின் கடமை. சிப்காட் வளாகங்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக சிப்காட் அமைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், முதல்வரின் அறிவிப்புகள் மற்றும் சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும்,” என்று அவர் பேசினார். இந்தக கூட்டத்தில் சிப்காட் மேலாண் இயக்குனர் கி.செந்தில்ராஜ், சிப்காட் செயல் இயக்குனர் டி.சினேகா, சிப்காட் திட்ட அலுவலர்கள், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் (நில எடுப்பு) மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE