புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்: மின் வாகனங்களுக்கு சாலை வரியில் 50% சலுகை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக அந்த வாகனங்களுக்கு சாலை வரியில் 50 சதவீதம் சலுகை தரப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்: ''நீண்டகால எதிர்பார்ப்பான தற்போதுள்ள குடியிருப்புகளை முறைப்படுத்துதல் தொடர்பாக ஒருமுறை கட்டிட முறைப்படுத்துதல் திட்டம் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும். தொழிற்சாலை மற்றும் அடுக்குமாடி உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டிடங்களுக்கும் அனுமதி ஆன்லைன் மூலம் வழங்கும் வகையில் புதுவை கட்டிட விதிகள், மண்டல ஒழுங்குமுறை விதிகள் திருத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்.

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில், 2 ஆயிரத்து 500 வீடுகள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடுகளை நிறைவு செய்யாத பயனாளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். புதுவை, காரைக்கால் கடற்கரைகள், ஆலங்குப்பம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழும், ஆன்மிக தலங்கள் பிரசாத் திட்டத்தின் கீழும் மேம்படுத்தப்படும்.

புதுவை மணப்பட்டில் பல்நோக்க சுற்றுலா மையம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். வழக்கமான மாத சுற்றுலா திருவிழாக்களுடன் காரைக்கால் கார்னிவல், வணிக திருவிழா, புத்தாண்டு கொண்டாட்டம், பிரெஞ்சு திருவிழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும். புதுவை முருங்கப்பாக்கத்தில் மின்னணு அருங்காட்சியகம் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.

புதுவை விமான நிலைய ஓடுதளத்தை 3 ஆயிரம் மீட்டர் நீளத்துக்கு அமைக்க நிதி அதிகம் தேவைப்படுவதால், ஓடுதளத்தின் திசையை தேசிய நெடுஞ்சாலையை நோக்கி அமைக்கும் சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். மின் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த வாகங்களுக்கு சாலை வரியில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரங்களுக்கு இடையே நீண்டதூர வழித்தடங்களுக்கு 10 மிதவை பேருந்துகள், தனியார் பங்களிப்புடன் 25 மின்சார பேருந்துகளும் இயக்கப்படும்.

பிரதமரின் மின் பேருந்து திட்டம் மூலம் 75 மின்சார பேருந்துகள் அரசு மானியத்துடன் இயக்கப்படும். இதற்கான பேருந்து கிடங்கு, மின் கட்டமைப்புக்கு 100 மற்றும் 90 சதவீத நிதியுதவி பெற திட்ட அறிக்கை சமர்பிக்கப்படும். சுய உதவி குழு மூலம் 38 இ-ரிக்‌ஷாக்கள் இயக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE