ஆவின் மூலம் பனைப்பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை: அமைச்சர் தகவல்

By எல்.மோகன்

நாகர்கோவில்: ஆவினில் பொனைப் பொருட்களை சேர்த்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டதில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது: "அனைத்து பொது மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் சென்றடைய வேண்டுமென்ற ஒரே நோக்கில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வரின் கிராமச் சாலைகள் திட்டம், விரிவான சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள உருவாக்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் விரிவான சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.70 கோடி மதிப்பில் நாகர்கோவில் - துவரங்காடு சாலையில் 60 மீட்டர் நீளம், 2.50 மீட்டர் உயரத்தில் சிறுபாலம் கட்டி 1/2 கி.மீ தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு, இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய பொருளான ஆவின் பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டண விலக்கு அளிக்குமாறு பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சுங்கக் கட்டணம் விலக்கு அளிக்காத காரணத்தால் ஆவின் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகை அனைத்தும் ஏழை விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணம்.

பாலில் இருந்து எடுக்கும் வெண்ணெய்க்கு கூட ஜிஎஸ்டி வரி போடுகிறார்கள் இது பல வழிகளில் பொதுமக்களை பாதிக்கும். எனவே, மத்திய அரசு மக்கள் விரோத ஏழைகள் விரோத அரசு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த ஆண்டு புதிதாக தேவைப்படும் பால் பொருட்களை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசின் சில அமைப்புகளுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

அதன்படி, ஆவினில் பனைப் பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே பால் கொள்முதல் விலை 6 ரூபாய் உயர்த்தி விட்டோம். ஆகையால் தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பே இல்லை. விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய பல திட்டங்களை செயல் படுத்தி விட்டோம் ஆனால், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை நிறுத்தி உள்ளது. விவசாயிகளின் பிரச்சினையை ஏற்க மத்திய அரசும் முன்வர வேண்டும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு எதுவுமே வழங்கவில்லை" என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE