பியூச்சர் அன்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகம் மூலம் 92.5 லட்சம் பேருக்கு ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டம்: செபி புள்ளிவிவரத்தில் தகவல்

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த நிதியாண்டில் பியூச்சர் அன்ட் ஆப்ஷன்ஸ் வர்த்தகம் மூலம் 92.5 லட்சம் முதலீட்டாளர்களுக்கு ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செபியின் புள்ளி விவரம் கூறுகிறது.

பங்குச் சந்தையில் பியூச்சர் அன்ட் ஆப்ஷன்ஸ் (எப் அன்ட் ஓ)வர்த்தகம் என்பது அதில் ஈடுபடுவோருக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வெடிகுண்டைப் போன்றது என முதலீட்டு நிபுணர் வாரன் பப்பெட் சுமார் 20ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார். இது உண்மை என்பதை இந்திய பங்குச்சந்தை வாரியத்தின் (செபி) சமீபத்திய புள்ளி விவரம் நிரூபித்துள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டில், தேசிய பங்குச் சந்தையில் (என்எஸ்இ) 78.28 லட்சம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் எனமொத்தம் 92.5 லட்சம் முதலீட்டாளர்கள் எப் அன்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு மொத்தம் ரூ.51,689 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த விவரம் செபியின் புள்ளி விவரத்தில் இடம்பெற்றுள்ளது.

சமீபத்தில் என்எஸ்இ சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செபி தலைவர் மாதவி புரி புச் பேசும்போது, “எப் அன்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம்கோடி வரை நஷ்டம் அடைகின்றனர்.

இது ஒரு பெரிய பிரச்சினை என நாம் ஏன் கருதுவதில்லை. இந்த தொகையை புதிய பங்கு வெளியீடுகளிலோ (ஐபிஓ), பரஸ்பர நிதி திட்டங்களிலோ அல்லது இதர முதலீட்டு திட்டங்களிலோ முதலீடு செய்திருந்தால் நல்ல லாபம் கிடைத்திருக்கும்” என்றார்.

எப் அன்ட் ஓ வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைவது குறித்து செபி கவலைதெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைவதைத் தடுக்கசெபி ஒரு ஆலோசனை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், எப் அன்ட் ஓ வர்த்தகத்தில் குறைந்தபட்ச ஒப்பந்த அளவை 4 மடங்கு அதிகரிப்பது, வாராந்திர ஒப்பந்த எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட சில மாற்றங்களை செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுபோல 2022-23 நிதி ஆண்டில் தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களில் 70 சதவீதத்தினர் கடும் நஷ்டத்தைச் சந்தித்தனர் என செபி சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE