மதுரையில் விரைவில் தமிழகத்தின் 3-வது சிப்காட் தொழில் புத்தாக்க மையம்: சிப்காட் மேலாண் இயக்குநர் தகவல்

By சுப.ஜனநாயகச் செல்வம்

மதுரை: மதுரையில் தமிழகத்தின் 3-வது சிப்காட் தொழில் புத்தாக்க மையமும், தமிழக முதல்வரின் பட்ஜெட் அறிவிப்பின்படி மேலூரில் 278 ஏக்கரில் சிப்காட் அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கவுள்ளது என சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சார்பில் சிப்காட் தொழில் புத்தாக்க மைய பங்குதாரர்கள் கூட்டம் சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது. ஸ்டார்ட் - அப் தமிழ்நாடு மேலாண் இயக்குநர் சிவராஜா ராமநாதன், போர்ஜ் இணை நிறுவனர் விஷ் சகஸ்ரநாமம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து தொழில் முனைவோர்கள், தொழில் வர்த்தக சங்கத்தினர், ஸ்டார்ட் - அப் நிறுவனத்தினருடன் கலந்துரையாடல் நடந்தது.

அதன் பின்னர் சிப்காட் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழகத்தில் முதலாவது சிப்காட் தொழில் புத்தாக்க மையம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும், இரண்டாவது மையம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 3-வது தொழில் புத்தாக்க மையம் மதுரையில் அமையவுள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் 26 ஆயிரம் சதுர அடியில் ரூ.24 கோடியில் இந்த மையம் அமையவுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து பகுதியினருக்கும் சேர்த்து தொழில் புத்தாக்க மையம் அமையவுள்ளது. ஏற்கெனவே 2 மையங்கள் அமைத்த அனுபவத்தின் அடிப்படையில் மதுரையில் அமைக்கவுள்ளோம். இது தொழில்முனைவோர்கள், தளவாடங்கள், ஸ்டார்ட் - அப் நிறுவனத்தினருக்கு ஏற்றவாறு அமைக்கப்படும். மேலும், கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து அவர்களையும் தொழில் முனைவோர்களாக உருவாக்கவுள்ளோம்.

தொழில் புத்தாக்க மையம் 6 மாத காலத்திற்குள் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும். அதேபோல் தமிழக முதல்வர் பட்ஜெட்டில் அறிவித்தபடி மேலூரில் 278 ஏக்கரில் சிப்காட் அமையவுள்ளது. அங்கு சாலை வசதி, மின் விளக்கு வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்பட பூர்வாங்க பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. மதுரை - தூத்துக்குடி வணிக பெருவழிப்பாதையில் மதுரை அருகே சிப்காட், சிட்கோ, எல்காட் போன்று பல நிறுவனங்கள் மூலம் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது" என்று செந்தில்ராஜ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE