நாட்டில் புதிதாக 9 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் புதிதாக 7300 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 9 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருவதாக மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள அவர், "நாட்டில் புதிதாக 7300 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 9 அணு உலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 12 அணு உலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களின் செயல்பாட்டு பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளப்படவில்லை. அணுமின் நிலையங்கள் அனைத்தும் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தால் உரிமம் அளிக்கப்பட்டு உயர் பயிற்சி பெற்றவர்களால் தான் இயக்கப்படுகிறது.

அணுமின் நிலையங்களை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனை உறுதி செய்ய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அணுமின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பிரசித்தி பெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் உடல்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE