ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தை தொடங்கியது சென்னை ஐஐடி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து சுகாதாரம், நிதித் தொழில்நுட்பம், விண்வெளி போன்ற முக்கிய துறைகளில் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்கவும் பயன்படுத்தவும் சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று (31 ஜூலை 2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐடிபிஐ-ஐஐடிஎம் செக்யூர் சிஸ்டம்ஸ் லேப் (I2SSL) ஆய்வகத்தை ஐடிபிஐ வங்கியின் தலைமைச் செயல் அலுவலரும் மேலாண் இயக்குநருமான ராகேஷ் சர்மா தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐடிபிஐ வங்கியின் தலைமைப் பொது மேலாளர் சௌமியா சவுத்ரி, ஐடிபிஐ தலைமைப் பொதுமேலாளரும் பிராந்தியத் தலைமை அதிகாரியுமான மஞ்சுநாத் பை, சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நூலா, சென்னை ஐஐடி-ன் ஐடிபிஐ-ஐஐடிஎம் செக்யூர் சிஸ்டம்ஸ் (I2SSL) ஆய்வக முதன்மை ஆய்வாளர் டாக்டர் செஸ்டர் ரெபீரோ, சென்னை ஐஐடி இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலக தலைமைச் செயல் அலுவலர் கவிராஜ் நாயர், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இணைய இணைப்பு, ஆட்டோமேஷன் ஆகியவற்றின் விரைவான வளர்ச்சியோடு, வங்கி, நிதி மற்றும் காப்பீடு, போக்குவரத்து, அரசு, மின்சாரம் மற்றும் எரிசக்தி, தொலைத்தொடர்பு, உத்திசார் மற்றும் பொது நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகள் யாவும் தகவல்- தொடர்புத் தொழில்நுட்பங்களையே கணிசமாக நம்பியுள்ளது. இதனால் ஹேக்கர்கள் உள்கட்டமைப்புகள் மீது சைபர் தாக்குதல்களை நடத்த அதிக வாய்ப்புள்ளது.

வங்கித்துறை, மோட்டார் வாகனங்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் அமைப்புகளில் உள்ள இணையப் பாதுகாப்பில் இந்த ஆய்வகம் கவனம் செலுத்துகிறது. அத்துடன் சோதனை மதிப்பீடு, மதிப்பீட்டுப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஆராய்ச்சியாளர்கள் இதற்கான பரிசோதனை நிகழ்வுகளை உருவாக்குவதுடன், பாதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வழிகாட்டல்களை மேலும் கடினப்படுத்த உதவுவார்கள். நிகழ் நேரத்தில் இணையப் பாதுகாப்பு அபாயங்களை நிர்வகிக்க நிறுவன அமைப்புகளுக்கு இது உதவிகரமாக அமையும்.

நிகழ்ச்சியில் பேசிய ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராகேஷ் சர்மா, “சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தை அமைப்பதற்காக சென்னை ஐஐடி உடன் கூட்டுச் சேர்ந்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. இணைய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே எதிர்த்துப் போராடுவதற்கும், தரவு மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஐடிபிஐ வங்கியின் உறுதிப்பாட்டிற்கு இந்த முன்முயற்சி சான்றாக அமைந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம், அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்புடன் கூடிய சூழலை உருவாக்க முயல்கிறோம். சாத்தியமான அச்சுறுத்தல்களை எதிர்நோக்குதல், அடையாளம் காணுதல், நடுநிலையாக்குதல் என திறனை மேம்படுத்தும் வகையில் அனைவரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” எனக் குறிப்பிட்டார்.

தொடக்க நிகழ்வில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “நமது நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கும் முக்கிய தகவல் உள்கட்டமைப்பான நிதித்துறை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணையப் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது. இதுபோன்ற அமைப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தொடர்ச்சியாக கவனித்து செயல்திறன்மிக்க பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். சென்னை ஐஐடி மற்றும் ஐடிபிஐ இடையேயான இந்த கூட்டு முயற்சி மிகச் சரியான நேரத்தில் உருவாகியுள்ளது. பாதுகாப்பு சவால்களுக்கு விரிவாக தீர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

“ஐடிபிஐ - ஐஐடிஎம் செக்யூர் சிஸ்டம்ஸ் லேப்” (I2SSL) செக்யூர் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் என்ற முறையில் பணிகளை கவனிக்கும். இந்த ஆய்வகத்தின் மூலம், கோட்பாட்டில் உள்ள அடிப்படை சிக்கல்கள் தொடங்கி நடைமுறை அமைப்பு உருவாக்குதல் வரையிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வடிவமைத்து செயல்படுத்துவதை ஆராய்ச்சியாளர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அத்துடன் கசிவுகளைப் பயன்படுத்தி முறைகேடு செய்தல், நடைமுறைப்படுத்துவதில் தாக்குதலை ஏற்படுத்துதல் போன்றவற்றைத் தடுப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும் சைபர் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு தளத்தை அமைக்கும் வகையிலும், ஆன்லைன் இளநிலைப் பட்டப்படிப்புகள், ஹேக்கத்தான், ரகசிய குறியீடுகளை அமைத்தல் (capture the flags -CTF), ப்ராஜக்ட்கள் போன்றவைகளுக்கு உதவும் வகையிலும் இந்த ஆய்வகம் செயல்படும்.

ஹார்டுவேர் ஃபயர்வால்கள், பாயின்ட்-ஆஃப்-சேல் சாதனங்கள், மொபைல் பேங்கிங் போன்ற முக்கியமான பயன்பாடுகளுக்கான அமைப்புகளை மிகக் கவனமாக வடிவமைக்க சென்னை ஐஐடி-ன் ஐடிபிஐ-ஐஐடிஎம் செக்யூர் சிஸ்டம்ஸ் லேப் (I2SSL) ஆய்வகம் திட்டமிட்டுள்ளது. நுணுக்கமான அணுகல் கட்டுப்பாடு, நினைவக குறியாக்கம், அறிவுக்கூர்மையுடன் உருவாக்கப்பட்ட நம்பகமான இயங்குதள தொகுதி (TPM) ஆகியவற்றை வழங்குவதுடன் நினைவக பாதுகாப்பான மொழிகள், குறியிடப்பட்ட கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் மால்வேர் பகுப்பாய்வுகளை ஏற்படுத்த ஆன்லைன் களத்தை உருவாக்கவும் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் மால்வேர்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள மால்வேர் இயக்கநேர செயல்பாட்டின் தரவுத்தொகுப்புகள் உதவிகரமாக இருக்கும். லினக்ஸ், விண்டோஸ், மொபைல் மால்வேர்களில் இவற்றை அறிந்துகொள்ள முடியும்.

மேலும், தானியங்கிப் பாதுகாப்பு மதிப்பீட்டிற்கான கருவிகளை உருவாக்குவதிலும் I2SSL பணிகளை மேற்கொள்ளும். 'பாதிப்புகள் இல்லாத நாளை' ஏற்படுத்தவும், சாதனங்களில் குறிப்பாக மொபைல் பயன்பாடுகளில் உள்ள பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிய உதவும் பைனரி பகுப்பாய்விற்கான கருவிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மொபைல் மற்றும் உள்ளீடு செய்யப்பட்ட அமைப்புகளில் தரத்தையும், தரச்சான்றை ஏற்படுத்தும் விதமாக அவை செயல்படும்.

கிரிப்டோகிராபியைப் பொறுத்தவரை, சமச்சீர்- சமச்சீர்அற்ற குறியாக்கவியல், குவாண்டம்-க்கு பிந்தைய குறியாக்கவியல் உள்ளிட்ட கிரிப்டோ-பிரிமிட்டிவ்களுக்கான வன்பொருள் விரைவுபடுத்தும் கருவிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றுவார்கள். இவற்றை செயல்படுத்தும்போது கிரிப்டோகிராபி நிர்ணயித்துள்ள தரத்தையும், தடுப்பு முறைகளையும் காணமுடியும். நம்பகமான இயங்குதள தொகுதியில் இவ்வாறான விரைவுபடுத்தும் கருவிகள் செயல்படுத்தப்படும். வங்கி மற்றும் நிதி, மோட்டார் வாகனத்துறை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கம்ப்யூட்டிங்கிற்கான நம்பிக்கையின் மூலத்தை இவை உருவாக்கும் என்பது உறுதி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE