பார்சலுக்கு தனி கட்டணம்: ஹோட்டல் உரிமையாளர் இழப்பீடு வழங்க தேவையில்லை - நுகர்வோர் ஆணையம்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ஹோட்டலில் பார்சல் வாங்குபவர்களிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து வழக்கில் உரிமையாளர் இழப்பீடு வழங்க தேவையில்லை என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை ஹோட்டல் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

பொள்ளாச்சி - உடுமலை சாலையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்னூரை சேர்ந்தவர் சுந்தர் இட்லி மற்றும் வடை வாங்கி உள்ளார். அதற்கு பேக்கிங் கட்டணம் ரூ.3.84 உடன் சேர்த்து ரூ.54 செலுத்தி உள்ளார்.

பேக்கிங் செய்யப்பட்ட கண்டெய்னர் மற்றும் பையில் ஹோட்டலின் பெயர் இருந்ததால், கட்டணம் பெற்றது நேர்மையற்ற வர்த்தக நடைமுறை எனக்கூறி, ரூ.2 லட்சம் இழப்பீடு கேட்டு கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சுந்தர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரிக்க, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

இதில் ஹோட்டல் உரிமையாளர் மனோஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் உரையில்: 3 தலைமுறைகளாக 70 ஆண்டுகளுக்கு மேலாக ஹோட்டல் துறையில் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான சேவை அளித்து வருகிறோம். உணவு பாதுகாப்பு சட்டப்படி பாலீத்தின் பொருட்களை உபயோகப்படுத்தாமல், பாதுகாப்பான கண்டெய்னரில் உணவுகளை பேக்கிங் செய்து வழங்குகிறோம். பேக்கிங்கில் உற்பத்தியாளரின் பெயர், முகவரியை குறிப்பிட வேண்டும் என்ற விதிப்படியே ஹோட்டலின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து பாத்திரம் கொண்டு வந்தால் பேக்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை என அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். கட்டாயப்படுத்தி பேக்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை. ஜி.எஸ்.டி சட்டத்தில் பேக்கேஜிங் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் பெற்றுக் கொள்ள வழிவகை உள்ளது. அதன்படியே பேக்கிங் கட்டணம் பெறப்பட்டுள்ளது. எனவே புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என, வாதிடப்பட்டது.

இந்த வழங்கில் நுகர்வோர் ஆணைய தலைவர் கணேஷ்ராம், உறுப்பினர் ரவி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்: வீட்டில் இருந்து கண்டெய்னர் கொண்டு வந்தால் பேக்கிங் கட்டணம் செலுத்த வேண்டாம் என அறிவிப்பு பலகை ஹோட்டலில் வைத்துள்ளார். உணவு பாதுகாப்பு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட பேக்கிங் பொருட்கள் மூலம் உணவு பார்சல் வழங்கியதை உரிமையாளர் நிரூபித்துள்ளார். சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கான குற்றச்சாட்டுக்கு புகார்தாரர் ஆதாரங்களை நிரூபிக்கவில்லை. இதனால் இந்த மனு எந்த நிவாரணமும் இன்றி தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிடப்பட்டது.

ஹோட்டல்களில் பார்சல் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஹோட்டல் உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர் மனோஜ் மற்றும் ராஜபாளையம் ஹோட்டல் சங்க நிர்வாகிகள் கூறுகையில்: பாலீத்தின் பைகளுக்கு தடை விதித்த தமிழக அரசு மீண்டும் மஞ்சம் பை திட்டத்தை தொடங்கி, பொருட்களை வாங்க பொதுமக்கள் வீட்டிலிருந்து பைகளை கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.

பொது இடங்களில் அரசு சார்பில் மஞ்சள் பை விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளது. தமிழக அரசின் மஞ்சள் பை திட்டத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பல உணவங்கள் சலுகை அறிவித்தும் உள்ளது. ஹோட்டல்களில் ஒரு முறை பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பேக்கிங் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை. வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பைகள் கொண்டு வருவதை ஊக்குவிக்கும் வகையில் தரமான பேக்கிங் பொருட்களுக்கு குறைந்தபட்ச தொகையையே வாடிக்கையாளர்களிடம் இருந்து பேக்கிங் பெறுகிறோம் என்றார்.

உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்ட போது: செய்திதாள்கள், பாலீத்தின் பைகளில் சூடான உணவு பொருட்களை பேக்கிங் செய்து வழங்க கூடாது. சுகாதாரமான முறையில் உணவு பொருட்களை பேக்கிங் செய்து வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்க வழிவகை உள்ளது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE