தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.120 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (ஜூலை 26) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6.415-க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280-க்கு விற்பனையானது.

பின்னர் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. டிசம்பர் 4-ம் தேதி ரூ.47,800, மார்ச் 28-ம் தேதி ரூ.50,000, ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என பவுன் விலை புதிய உச்சங்களை அடைந்தது. பின்னர், சற்று குறைந்தது.

கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்றைய தினமே விலை குறைந்தது. காலையில் பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் ரூ.52,400 ஆக குறைந்தது.

நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.480 குறைந்த நிலையில், நேற்றும் ரூ.480 குறைந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.6,430-க்கும், ஒரு பவுன் ரூ.51,440-க்கும் விற்பனையானது. இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3.160 குறைந்துள்ளது.

இன்னும் எத்தனை நாளைக்கு! ஓரிரு வாரங்களுக்கு விலையில் சற்று ஏற்ற இறக்கம் இருக்கக்கூடும். சர்வதேச அளவில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால் தங்கம் விலை மேலும் குறையும். பவுன் விலை ரூ.50 ஆயிரம் வரை இறங்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், ஆடி பதினெட்டுக்கு பிறகு விலை அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE