பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் திட்டங்களால் நாட்டில் தனியார் முதலீடு அதிகரிக்கும்: தொழில் துறையினர் கருத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களால் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகஅளவில் உருவாகும் என்று ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான வீரேந்திர மைஸ்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதிஆண்டுக்கான பட்ஜெட்டை சிலதினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் மேம்பாடு, குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை மையப்படுத்தி பட்ஜெட்டில் அதிக அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்என்று வீரேந்திர மைஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இதன் வழியாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்குக்கு உந்துசந்தியாக இந்த அறிவிப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.

ரூ.11 லட்சம் கோடி.. படேல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கவிதா ஷிர்வைகர் கூறுகையில், “உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்களிப்பை செலுத்தும். நாட்டின் கட்டமைப்பை நவீனப்படுத்த மத்திய அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருவதை இந்த அறிவிப்புகள் காட்டுகின்றன” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE