வருகிறது புதிய சுங்கக் கட்டண வசூல் முறை: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் உலகளாவிய போக்குவரத்து செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து மூலம் அளித்த பதிலில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஃபாஸ்டேக் கட்டண வசூல் வசதியுடன் கூடுதலாக புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு - மைசூரு இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 275 மற்றும் ஹரியாணாவில் உள்ள பானிபட் – ஹிஸார் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 709 (பழைய எண் 71A) ஆகிய இரு நெடுஞ்சாலைப் பிரிவுகளில், ஜிஎன்எஸ்எஸ் எனப்படும் உலகளாவிய போக்குவரத்து செயற்கைக் கோள் நடைமுறை அடிப்படையிலான மின்னணு சுங்கக் கட்டண வசூல் முறை முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் எஞ்சியுள்ள 20,000 கிலோ மீட்டர் தூரத்துக்கான நெடுஞ்சாலைகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாட்டில் நெடுஞ்சாலைகளை அமைப்பதில் வேகத்தை அதிகரிக்க அதிவேக மாதிரி முறையை பின்பற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது” என்றார்.

பசுமை நெடுஞ்சாலைத் திட்டம்: “நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் விதமாக, சாலையோரங்களில் இதுவரை 402.28 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலையோரங்கள் மற்றும் சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் இதுவரை 21.67 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

“தமிழகத்தில் 29 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களும், தெலங்கானாவில் 24 தேசிய நெடுங்சாலைகள் திட்டங்களும், ஆந்திரப் பிரதேசத்தில் 36 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களும், கர்நாடகாவில் 40 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களும், கேரளாவில் 11 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களும் நிலுவையில் உள்ளன” என்று மற்றொரு கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE