மத்திய பட்ஜெட்: கிருஷ்ணகிரி ரயில் பயணிகள், விவசாயிகள் ஏமாற்றம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: மத்திய பட்ஜெட்டில் கிருஷ்ணகிரி ரயில் நிலையம் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என கிருஷ்ணகிரி மாவட்ட பேருந்து மற்றும் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சந்திரசேகரன் வேதனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திராவுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக கிருஷ்ணகிரிக்கு ரயில் நிலையம் அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இதற்காக 2.5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி மத்திய அரசுக்கு அனுப்பினோம். மேலும், கடந்தாண்டு, ’பிரதமரின் கதி சக்தி யோஜனா’ மூலம் கிருஷ்ணகிரி ரயில் நிலையம் குறித்த திட்ட ஆய்வு பணிகள் நடந்த நிலையில், பட்ஜெட்டில் ரயில் நிலைய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆடிட்டர் கொங்கரசன்: மத்திய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. நடுத்தர, சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெற்றுள்ளன. முத்ரா திட்டத்தில் ரூ.20 லட்சம் கடன் என்பதே இதற்கு உதாரணம். குறிப்பாக, புதிதாக வேலையில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்குவது, நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டும் திட்டம், வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு, வருமான வரியில் தளர்வு எனச் சிறப்பான பட்ஜெட்டாக உள்ளது.

கே.எம்.ராமகவுண்டர் (தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்): மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கியுள்ளனர். இதற்கு முன்னர் ரூ.2.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்களைக் கூறுவது கடன் திட்டமா, வளர்ச்சிப் பணிகளுக்கா என்பதைத் தெளிவாகக் கூறவில்லை. குறிப்பாக வேளாண் துறை சார்ந்த 5, 6 திட்டங்களில் நிதியை குறைத்துள்ளனர். மொத்தத்தில் இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தருகிறது.

ஏகம்பவாணன் (டான்ஸ்டியா உறுப்பினர்): சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை (முத்திரா திட்டத்தைத் தவிர). கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பிரதமர் கடன் திட்டம் உயர்த்தப்படவில்லை. பெண்கள் தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு சலுகைகள் இல்லை. ஏற்கெனவே உள்ள சிறு தொழில் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பம் பெற தேவையான நிதி உதவிகள் அறிவிக்கப்படவில்லை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE