மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைப்பு எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக, தங்கம் விலை அதிரடியாக ஒரு பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது.

மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.55,240 வரை அதிகரித்து விற்பனையானது. தங்கம் விலை அதிகரித்து வருவதைக் கண்டு நகை வியாபாரிகளும், நகை வாங்குவோரும் கவலை அடைந்தனர். இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது. மத்திய அரசின் வரி குறைப்பு நடவடிக்கையை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து, சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘மத்திய அரசு வருவாயை பெருக்குவதற்காக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 8 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை உயர்த்தியது. இதனால், தங்க நகை வியாபாரம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.

இந்த வரி குறைப்பு மூலம், வியாபாரிகளுக்கு தங்கம் விற்பனை அதிகரிக்கும். அத்துடன், பொதுமக்களும் விலை குறைப்பால் தங்கம் வாங்குவதோடு, தங்கத்தில் முதலீடு செய்யவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தபோது, தங்கம் கடத்தல் குறையும் என நம்பியது. ஆனால், அதற்கு மாறாக தங்கம் கடத்தல் அதிகரித்தது. தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் தங்கம் கடத்தலும் குறையும் என்றார்.

பொருளாதார விமர்சகர் வ.நாகப்பன் கூறுகையில், ‘நாட்டின் அன்னிய செலாவணியில் கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், தங்கம் விலை குறையும். இதனால், நடுத்தர, ஏழை, எளிய மக்கள் அதிகளவில் தங்க நகையை வாங்குவார்கள். அத்துடன், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தலும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது” என்றார்.

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக, தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550-க்கும், பவுனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.56,040-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.92.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.92,500 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE