அபுதாபி - கோவை விமானத்தில் முன்பதிவு மந்தம் - சேவையை நிரந்தரமாக்க..?

By இல.ராஜகோபால்

கோவை: புதிதாக தொடங்கப்பட உள்ள கோவை- அபுதாபி விமானத்தில், மறுமார்க்கத்தில் பயணிகள் முன்பதிவு மந்தமாக உள்ளது. புதிய விமான சேவையை நிரந்தரமாக்க தொழில்துறையினரின் ஒத்துழைப்பு அவசியம் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது கோவை - அபுதாபி இடையே நேரடி விமானசேவை ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை - துபாய், அபுதாபி, தோகா(கத்தார்) உள்ளிட்ட பல நாடுகளுக்கு விமான சேவையை விரிவுபடுத்த வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை விடுக்கப்பட்டுவரும் நிலையில், கோவை - அபுதாபி இடையே விமான சேவை தொடங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் முதல்கட்டமாக வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேவையை நிரந்தரமாக்குவதில் தொழில்துறையினர் அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என விமான பயண ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கோவையில் இருந்து முன்பு ஷார்ஜா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் கோவை - இலங்கை இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட விமான சேவை தற்போது வரை தொடங்கப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், கோவையில் இருந்து அபுதாபிக்கு புதிய விமான சேவை தொடங்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் கோவையில் இருந்து அபுதாபி செல்வதற்கு அதிக எண்ணிக்கையில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதாகவும், மறுபுறம் அபுதாபியில் இருந்து கோவைக்கு வர 5, 7 என மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தற்போது வரை டிக்கெட் முன்பதிவு நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 186 பேர் பயணிக்கக்கூடிய ‘ஏ 320’ ரக விமானத்தில் இருக்கைகள் அதிகம் நிரம்பினால் மட்டுமே விமான நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகும். எனவே, கோவையில் தொடங்கப்படும் அபுதாபி சேவையை நிரந்தரமாக்க வேண்டியது பயணிகள் தரப்பில் கிடைக்கும் வரவேற்பை பொருத்து மட்டுமே அமையும்.

கோவையில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக பல வெளிநாடுகளுக்கு செல்லும் தொழில்முனைவோர் கோவை திரும்பும்போது முடிந்தவரை அபுதாபி விமான நிலையத்தை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

துபாய் போன்றே அபுதாபியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகும். அங்கு தற்போது புதிதாக மிகப்பிரம்மாண்டமான முறையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே கோவை, திருச்சி உள்ளிட்ட 4 நகரங்களுக்கு விமான சேவை தொடங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அபுதாபியில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவதால் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின்கீழ் உள்ள மாவட்டங்கள் அனைத்துக்கும் மிகவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE