பரஸ்பர நிதிகளுக்கு மாறும் பொதுமக்கள் சேமிப்பு: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

By செய்திப்பிரிவு

மும்பை: வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு தொடர்பான உச்சி மாநாடு மும்பையில் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியதாவது: பொதுமக்கள் காலம் காலமாக தங்கள் சேமிப்பை வங்கிகளின் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போது அவர்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வங்கிகள் மட்டுமல்லாது பங்குச்சந்தைகள், பரஸ்பர நிதி, காப்பீடு, ஓய்வூதிய நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர்.

இது வங்கித் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, கடன் மற்றும் டெபாசிட் இடையிலான இடைவெளியை சீராக வைத்திருக்க வங்கிகள் புதிய முறைகளை ஆராய வேண்டும். இதை சமாளிக்க குறுகிய கால கடன், டெபாசிட் சான்றிதழ் உள்ளிட்ட இதர ஆதாரங்களை அதிக அளவில் நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதத்தைஅதிகரிக்க வேண்டி இருப்பதுடன், ரொக்க நிர்வாக சவாலையும் சந்திக்க வேண்டி உள்ளது. வங்கிகள் இந்த மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.

கடந்த 2023-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்தில் வங்கித் துறையில் நெருக்கடி ஏற்பட்டது. இது வங்கிகளின் ஸ்திரத்தன்மையை கேள்விக் குறியாக்கியது. எனவே, வங்கிகள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE