மைக்ரோசாஃப்ட் சர்வர் முடக்கத்துக்குக் காரணமான கிரவுட்ஸ்டிரைக் நிறுவனத்துக்கு ரூ.75,300 கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

டெக்சாஸ்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர் முடக்கத்துக்குக் காரணமாக அமைந்த கிரவுட்ஸ்டிரைக் (Crowdstrike) நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.75,300 கோடி சரிந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்வர் திடீரென்று முடங்கியது. இதனால், உலக அளவில் மைக்ரோசாஃப்ட் செயலிகளைப் பயன்படுத்திவந்த நிதி , விமானம், ரயில், ஊடக நிறுவனங்களின் சேவைகள் முடங்கின.

அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக்கின் மென்பொருள் அப்டேட் காரணமாகவே இந்தத்தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கிரவுட்ஸ்டிரைக்கின் பங்கு மதிப்பு 11 சதவீதம் சரிந்தது. இதனால், அந்நிறுவனத்துக்கு ரூ.75,300 கோடி இழப்புஏற்பட்டது.

சைபர் பாதுகாப்பு: கிரவுட்ஸ்டிரைக் நிறுவனம், மைக்ரோசாஃப்ட், கூகுள் உட்படஉலக அளவில் 23,000 நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு வழங்கிவருகிறது. தனது வாடிக்கையாளர்களின் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய கிரவுட்ஸ்டிரைக் அவ்வப்போது தனது மென்பொருளை மேம்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய கிரவுட்ஸ்டிரைக்கின் ‘பால்கன் சென்சார்’ மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டது. இதில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, மைக்ரோசாஃப்டின் சர்வர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென முடங்கியது.

இதனால், உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் அஸூர், ஆபீஸ் 365 சேவைகளை பயன்படுத்திய நிறுவனங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உட்பட உலகம் முழுவதும் நிதி, விமானம், ரயில், ஊடக சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த தொழில்நுட்பக் கோளாறால் இந்தியாவில் 200 விமான சேவை கள் ரத்து செய்யப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE