பழநியில் காய்த்து குலுங்கும் வாட்டர் ஆப்பிள் - லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எதிர்பார்த்த விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பழநி அருகே உள்ள ஆயக்குடி, சட்டப்பாறை, அமரபூண்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் கொய்யாவுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்நிலையில் சில ஆண்டுகளாக பூச்சி தாக்குதல், தட்பவெப்ப நிலை மாற்றத்தால் கொய்யா சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. அதனால் கொய்யாவுக்கு மாற்றாக மலைப்பாங்கான பகுதிகளில் விளையும் வாட்டர் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பன்னீர் நாவல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது பழநி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்யப்படுகிறது. வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இப்பழங்கள் உள்ளன. இப்பழத்தில் பல்வேறு சத்துகள் அடங்கி உள்ளன. தற்போது கணக்கன்பட்டி அருகேயுள்ள கோம்பைப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் காய்த்து குலுங்குகின்றன. அதனை அறுவடை செய்யும் பணியில் விவசா யிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வதால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து கோம்பைப்பட்டி விவசாயி வடிவேல் கூறுகையில், கொய்யாவுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. அதேநேரம், விளைச்சலும் குறைந்து வருகிறது. அதனால் பலரும் மாற்று பயிர்களை சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். எதிர்பார்த்ததைவிட நல்ல விளைச்சலும், கூடுதல் விலையும் கிடைக் கிறது. இந்த பழத்துக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் தேவை அதிகம் உள்ளது. அதனால் வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE