ஸ்
நாக் எக்ஸ்பர்ட்ஸ், ஆன்லைன் மூலம் தின்பண்டம் விற்கும் நிறுவனம். ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த அருள்முருகன், தன் நண்பருடன் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
ஆன்லைனில் தின்பண்டம் விற்பனை.. என்கிற ஐடியா எப்படி உருவானது, வாடிக்கையாளர்களாக யாரை குறிவைத்தார்.. எப்படி நிதி திரட்டினார் என்பது உள்ளிட்ட தகவல்களை அருள்முருகன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் விரிந்த உரையாடலின் சுருக்கமான வடிவம் இது -
விவசாயக் குடும்பம். கோவையில் உள்ள வேளாண் கல்லூரியில் பிடெக் படித்திருக்கிறார் அருள்முருகன். படித்து முடித்த பின்பு விவசாயத் துறையைச் சேர்ந்த `ஐஏபி இந்தியா’ என்கிற நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இந்த நிறுவனம் வெள்ளரிக்காயை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனம். சொந்த ஊருக்கு அருகிலேயே வேலை கிடைத்ததால் இயல்பு வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. 2014-ம் ஆண்டுவாக்கில் சென்னை வந்தவர், கல்லூரி நண்பரிடம் தொழில் பற்றி நிறைய பேசியிருக்கிறார். அதில் ஒன்றுதான் - தொழில்முனைவு.
இயற்கையாக கிடைக்கும் ஒரு பொருளின் ஆயுளைக் கூட்ட சிலவற்றைச் சேர்க்க வேண்டும். பொதுவாக சந்தைக்கு அனுப்பப்படும் ஒரு பொருளுக்கு முதிர்வு தேதி 3 மாதங்களில் தொடங்கி ஒரு ஆண்டு, 2 ஆண்டுகள் என்றுகூட நீள்கிறது. அருள்முருகன் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கிறார். வாடிக்கையாளர் ஆர்டர் கொடுத்த பிறகு அவர் கேட்கும் பொருளை தயாரித்தால் என்ன? என்பதுதான் அந்த யோசனை. அதன் விளைவுதான் - ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ்.
வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்த பிறகே பொருளை தயாரிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கு இ-காமர்ஸ் வழிதான் சரியான தேர்வாக இருக்க முடியும். இதற்கு தொழில்நுட்பம் தெரிந்த நபர்களின் உதவி வேண்டும். பணப் பரிவர்த்தனையை சரியாகக் கையாள தனது நண்பனின் சகோதரியை குழுவில் இணைத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே ஒரு சமையல் கலைஞருடன் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. பொருட்களை தயாரித்து வைக்காமல் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தயாரிப்பதால், அதற்கேற்ற வகையில் இ-காமர்ஸ் தளத்தை வடிவமைத்தனர். வாடிக்கையாளர் ஒரு மாதம், மூன்று மாதத்துக்கென பணம் செலுத்திவிடும் பட்சத்தில் அந்தக் காலம் முழுக்க தின்பண்டங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இணையதளம் தயாரான பிறகு அடுத்த சில நாட்களிலேயே ஆர்டர்கள் கணிசமாக வரத் தொடங்கியிருக்கிறது. வாரம் முழுவதும் திண்டுக்கல்லில் பணி. வார இறுதி நாட்களில் சென்னை வந்து நண்பரின் வீட்டில் தங்கியிருந்து ஆர்டர்களை உரிய இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஒரு சில மாதங்கள் இந்த நிலைமை நீடித்த பிறகு வேலையை இன்னும் சற்று பெரிதாக்கத் திட்டமிட்டனர். பெரிய அளவிலான முதலீடு இல்லாமல் இந்த தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியாது என்பதும் புரிந்தது. அதனால் விரிவாக்கப் பணிகளுக்காக நிதி திரட்டும் பணியை ஆரம்பித்தனர். மும்பை ஐஐடியில் 10 நிமிடங்களில் ஐடியாவை சொல்லி நிதி திரட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட சில முதலீட்டாளர்கள், ஐந்தாவது நிமிடத்திலேயே அருள்முருகன் குழுவினரின் ஐடியாவை ஏற்றுக்கொண்டனர். கணிசமான நிதி கிடைத்தது. இந்த நிதியை வைத்து விரிவாக்கப்பணிகளில் கவனம் செலுத்தினார்கள். ஆனால் விரிவாக்கத்துக்குப் பிறகும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதில் தேக்கம் நிலவியிருக்கிறது. வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளை கட்டுப்படுத்த மெனக்கெட வேண்டியிருந்தது.
ஒரு நண்பரின் தொடர்பு கிடைத்தது. இதே மாதிரியான சந்தையில் இருப்பவர் அவர். அவருடைய ஆலோசனை புது தெளிவைக் கொடுத்தது. இந்தியாவில் `ஆட்டோ டெபிட்’ (auto debit) செய்ய முடியாது என்பது. அதாவது முதலீடு செய்வது, கடன் வாங்குவது உள்ளிட்ட பிரிவுகளில் ஒரு முறை காசோலை அல்லது ஆட்டோ டெபிடுக்கு கையெழுத்து போட்டுவிட்டால் போதும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் பணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் சேவைகளுக்கு அப்படி நிறுவனங்கள் பணத்தை பிடித்துக்கொள்ள முடியாது. வெளிநாடுகளில் அதற்கான அனுமதி இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அந்த அனுமதி இல்லை.
அதனால் சப்ஸ்கிரிப்ஷன் முறையில் வாடிக்கையாளர்களை தொடர்ந்து வாங்க வைக்க முடியாது என்பது இவர்களுக்கு புரிகிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் சமயத்தில்.. அல்லது பணம் இருக்கும் போது மட்டுமே வாங்குவார்கள் என்பது புரிந்தது.
தவிர மாதம் 700 ரூபாய், மூன்று மாதங்களுக்கு 1,500 ரூபாய் செலுத்துங்கள் என்ற அழைப்புகளையும் மக்கள் விரும்புவதில்லை. தின்பண்டங்களுக்காக முன்கூட்டியே பணம் செலுத்தச் சொல்வது எந்தவகையில் நியாயம்? என்பது போன்ற கேள்விகளை வாடிக்கையாளர்கள் எழுப்பினர். அதனால் விதிமுறைகள் மாறாத வரை சப்ஸ்கிரிப்ஷன் மாடலில் பெரிய அளவில் சாதிக்க முடியாது என்பது உறைத்தது.
இப்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் கதவுகளைத் தட்டியிருக்கிறார்கள். ஓரளவுக்குப் பலன் கிடைத்திருக்கிறது. அங்குள்ள ஊழியர்களுக்கு தரமான தின்பண்டங்களை அனுப்ப தொடங்கியிருக்கிறார்கள். தொழில் மெல்ல வளர்கிறது. அடுத்தகட்டமாகவும் ஒரு குறிப்பிட்ட நிதி கிடைத்திருக்கிறது.
இலக்குகளும் விரிந்திருக்கிறது. இப்போதைக்கு சப்ஸ்கிரிப்ஷன் மாடலை விரிவுபடுத்த திட்டங்கள் உள்ளன. 2,000க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களை களமாக்கவும், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் என தேவைக்கேற்ற இடங்களில் கடைபரப்பவும் உறுதியான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது ஸ்நாக் எக்ஸ்பர்ட்ஸ்.
karthikeyan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago