தூத்துக்குடியில் ரூ.36,236 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆலை: அடிப்படை ஒப்பந்தப் பணி தொடக்கம்

By கி.கணேஷ்

சென்னை: சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.36,236 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் ஆலை அமைப்பதற்கான அடிப்படை ஒப்பந்தப் பணிகளை தொடங்கியுள்ளது.

தமிழக தொழில் துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், ரூ.6,64,180 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனம் ரூ.36,236 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்நிறுவனம், தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஆலையை நிறுவுவதற்கான முயற்சியாக இந்த முதலீட்டை மேற்கொள்கிறது. இதையடுத்து, தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகுகளை அமைக்கும் வகையில், ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது.

இந்த முதலீட்டின் அடிப்படையில் தூத்துக்குடி பகுதியில் 1,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், செம்ப்கார்ப் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஜப்பானிய நிறுவனங்களான சோஜிட்ஸ் கார்ப் மற்றும் கியூஷு எலெக்ட்ரிக் பவர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE