மின் கட்டண உயர்வால் மேலும் தொழில் நெருக்கடி: வேதனையில் விசைத்தறி உரிமையாளர்கள்

By இரா.கார்த்திகேயன்

பல்லடம்: தமிழ்நாடு அரசின் புதிய மின் கட்டண உயர்வால் விசைத்தறி தொழில், மேலும் நெருக்கடிக்குள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விசைத்தறி உரிமையாளர்கள்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி, சுமார் 4 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றன. 1990-ம் ஆண்டு முதல் 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி ஒப்பந்தம் செய்து வந்ததால், தொடர்ந்து இந்த தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் உரிய கூலி வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். மேலும், கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து உயர்த்தப்படும் மின் கட்டணத்தாலும் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத் தலைவர் ப.குமாரசாமி கூறியதாவது: விசைத்தறிகளுக்கு 1000 முதல் 1500 யூனிட் வரை இருந்த கட்டணம், கடந்த 2021-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.1 உயர்ந்துள்ளது. 1500 யூனிட்டுக்கு மேல் கடந்த 2022-ம் ஆண்டு ரூ.1.40 உயர்த்தப்பட்டது. ஓராண்டு காலம் மின் கட்டணம் செலுத்தாமல் போராடி 70 பைசா குறைக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் ரூ.1.50 பைசா உயர்ந்துள்ளது.

2011-ம் ஆண்டுக்கு பிறகு எங்களுக்கு உரிய கூலி கிடைப்பதில்லை. கடந்த 13 ஆண்டுகளாக உரிய கூலிக்கு போராடி வருகிறோம். ஆனால் நியாயமான கூலி கிடைக்கவில்லை. விசைத்தறி தொழில் காப்பாற்றப்படும் என மக்களவை தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தொழில்தான் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இன்றைக்கு இந்த மின் கட்டண உயர்வு எங்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே 100 விசைத்தறி குடோன்களில் 10 முதல் 20 குடோன்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போதைய இந்த மின் கட்டண உயர்வு, மேலும் படுபாதாளத்துக்குதான் கொண்டு செல்லும். 2011-க்கு பிறகு உரிய கூலி கிடைக்கவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக உரிய கூலி கேட்டு போராடி வருகிறோம். அவ்வப்போது ஒப்பந்தப்படி கூலி உயர்த்தப்பட்டாலும், மார்க்கெட் நிலைமை சரியில்லை எனக் கூறி, பழைய கூலியே திரும்பத்திரும்ப வழங்கப்படுகிறது. உரிய கவனம் கொண்டு அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொழில் தொடர்ந்து நலிவடைந்து கொண்டிருக்கிறது.

எனவே, உரிய கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் பெற்று தந்தால் மட்டுமே இந்த தொழிலின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். ஏற்கெனவே பல்வேறு ஊர்களில் விசைத்தறி இயந்திரங்கள் பழைய இரும்பு கடைகளுக்கு விற்கப்படுகின்றன. அரசு உரிய கவனம் செலுத்தி கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சங்கத்தின் பொருளாளர் பூபதி கூறும்போது, “தொழிலாளர்களின் சம்பள உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, வாடகை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழில் முடங்கியுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், வேறு தொழிலுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். அரசின் மின் கட்டண உயர்வால் மாதம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை மின் கட்டணம் உயரும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE