கிருஷ்ணகிரியில் தக்காளி மகசூல் பெரிதும் பாதிப்பு: விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என தகவல்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பருவநிலை மாற்றத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி மகசூல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை மற்றும் தமிழகமெங்கும் உள்ள சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு அறுவடையாகும் தக்காளி, ராயக்கோட்டையில் உள்ளதக்காளி சந்தை, ஓசூர், கிருஷ்ணகிரி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக தை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்து, விலை உயர்ந்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம்: இது தொடர்பாக கிருஷ்ணகிரி விவசாயிகள் கூறியதாவது: தை பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் தக்காளி நடவு செய்யப்பட்ட 75 நாளிலிருந்து, ஜூலை இறுதி வரை அறுவடை கிடைக்கும். ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்ய நாற்று, குச்சிகட்டுதல், மருந்து தெளித்தல் உட்பட பராமரிப்புக்காக ரூ.1.50 லட்சம் செலவாகிறது.

வெயில் தாக்கத்தால்.. நடப்பாண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, தக்காளிச் செடிகள் பூக்கும் தருணத்தில் காய்ந்தன. மேலும், கோடையில் பெய்த மழையால் செடிகளில் தண்ணீர் தேங்கி, அழுகின. இதனால், தை பட்ட தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.

ஓசூர், ராயக்கோட்டை சந்தையிலிருந்து தினமும் 2 ஆயிரம் முதல் 2,500 டன் தக்காளி வெளி மாநில, மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்வது வழக்கம். தற்போது, தக்காளி வரத்துக் குறைவால், விலை அதிகரித்துள்ளது.

ராயக்கோட்டை சந்தைக்கு தற்போது 600 முதல் 700 கிரேடு (ஒரு கிரேடு 25 கிலோ) மட்டுமே விற்பனைக்கு வருகிறது. ராயக்கோட்டை சந்தையில் நேற்று ஒரு கிரேடு தக்காளி ரூ.1,700 முதல் ரூ.1,800 வரை விற்பனையானது. சில்லறை விலையில் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

இழப்பீடு வழங்க வேண்டும்: தற்போதுதான் ஆடிப் பட்டத்தில் தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். அதை அறுவடை செய்ய 3 மாதங்களாகும். எனவே, வரும் மாதங்களில் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை.

பருவ நிலை மாற்றத்தால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், தரமான விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுக்களை, மானிய விலையில் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE