எகிறும் டிஏபி உரம் விலை: மாற்று உரங்களை பரிந்துரைக்கும் வேளாண் துறை!

By டி.ஜி.ரகுபதி 


கோவை: டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் வெங்கடாசலம் இன்று (ஜூலை 15) வெளியிட்ட செய்திக் குறிப்பு: "கோவை மாவட்டத்தில், பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்துள்ளதால் விவசாயிகள் அதிகளவில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பாண்டில் சோளம் 1,396 ஹெக்டேர், பயிறு வகைகள் 325 ஹெக்டேர், எண்ணெய் வித்துக்கள் 1,118 ஹெக்டேர் பரப்பளவுகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 2,966 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,477 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,477 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 5,580 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,098 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னை மரத்துக்கு நீரில் கரையக் கூடிய வெள்ளை பொட்டாஷ் உரத்தை இருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது பன்னாட்டு சந்தையில் டி.ஏ.பி விலை அதிகமாக உள்ளதால் டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ள சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்திட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சூப்பர் பாஸ்பேட் உரத்தினை எண்ணெய் வித்துப் பயிர்களில் டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும் போது மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது. டி.ஏ.பி உரமானது மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், சூப்பர் பாஸ்பேட் உரம் டி.ஏ.பி உரத்தினை விட குறைவாகவே ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் டி.ஏ.பி உரம் 50 கிலோ ரூ.1,350-க்கும், சூப்பர் பாஸ்பேட் 50 கிலோ ரூ.610-க்கும், அம்மோனியம் பாஸ்பேட் 50 கிலோ ரூ.1,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, விவசாயிகள் டி.ஏ.பி உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE