நீலகிரியில் கை கொடுக்காத காலநிலையால் கேரட் வரத்து பாதிப்பு: கிலோ ரூ.100-ஐ தொட்டது

By ஆர்.டி.சிவசங்கர்


உதகை: பருவ மழை தாமதத்தால், நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, கேரட் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் சாகுபடியில் அதிகளவிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளையும் மலைக்காய்கறிகள் சென்னை, மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக, நாள்தோறும் டன் கணக்கில் கேரட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வழக்கமாக கேரட்டுக்கு நிலையில்லா விலை இருந்தாலும், அறுவடை நாட்களுக்குள் கட்டாய அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மற்ற பயிர்களைப்போல இல்லாமல் கேரட் பயிருக்கு விலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அறுவடை செய்யப்படும்.

இந்நிலையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலையில் மலைக் காய்கறிகளின் விலையில் சரிவு ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை காலதாமதமானதால், வரத்து குறைந்து மலைக் காய்கறிகள் விலையேற்றம் கண்டுள்ளன.

இதன்படி நீலகிரியில் கிலோ ரூ.40 முதல் ரூ.60-க்கு கொள்முதல் செய்யப்படும் கேரட், மேட்டுப்பாளையத்தில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு கேரட் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல உதகை மலைப்பூண்டு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. கேரட் விலை உயர்வால், அறுவடைப்பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கேத்தி பகுதி விவசாயி ஹரிஹரன் கூறியதாவது: கேரட் ஆண்டுக்கு இரண்டு முறை சாகுபடி செய்யப்படும். ஒரு சில ஆண்டுகளில் தேவைப்பட்டால் மூன்று முறை சாகுபடி செய்யப்படும். ஓர் ஏக்கரில் 15 டன் முதல் 20 டன் வரை கேரட் கிடைக்கும். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வரலாறு காணாத வெயில் இருந்ததால் கேரட் சாகுபடி பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துவிட்டது. இதனால், விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE