கடந்த ஆண்டு 4.6 கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த ஆண்டு 4.60 கோடிக்கும் அதிகமானோர் புதிய வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்று ரிசர்வ் வங்கி அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ​​“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா எவ்வாறு புதிய வேலைகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்பதை, இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை பிரதிபலிக்கிறது. 1981-82-க்குப் பிறகு முதல்முறையாக இரண்டரை மடங்குக்கும் மேலான வேலைவாய்ப்புகளை மோடி அரசு கடந்த ஆண்டு உருவாக்கி உள்ளது. இதன்மூலம், கடந்த ஆண்டு 4.60 கோடிக்கும் அதிகமானோர் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இது 6% அதிகரிப்பு.

2022-23-ல், வேலையின்மை 3.2 சதவீதமாக இருந்தது. இது மிகவும் குறைவான சதவீதம். புதிய வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, பிரதமர் மோடியின் பதவிக்காலம் மிகவும் வெற்றிகரமானது என்று நான் நம்புகிறேன். 2014-2023-க்கு இடையில் 12.5 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலமான 2004-2014ல், இந்த எண்ணிக்கை வெறும் 2.90 கோடியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

இந்திய வேலைவாய்ப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் நாட்டில் 4.67 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 2023-24ல் 6% ஆகவும், 2022-23ல் 3.2% ஆகவும் இருந்தது. இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பு 2023-24ல் 64.33 கோடியாகவும், 2022-23ல் 59.67 கோடியாகவும் இருந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE