‘முதலீட்டுக்கு நம்பகமானது, பாதுகாப்பானது ஆந்திர மாநிலம்’ - முதல்வர் சந்திரபாபு நாயுடு

By செய்திப்பிரிவு

அமராவதி: முதலீட்டுக்கான நம்பகமான, பாதுகாப்பான மாநிலம் ஆந்திரப் பிரதேசம் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆந்திர பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். முந்தைய அரசாங்கம் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து இதை தொடங்குவது ஒரு பெரிய சவால். இந்தப் பணியில் அனைவரின் ஆதரவையும், குறிப்பாக நமது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகங்களின் ஆதரவை கோருகிறேன். அரசாங்கம் பொறுப்புக்கூறும் அதே வேளையில் குடிமக்களுக்கு அரசின் செய்தியை தெரியப்படுத்துவதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் வின்ஃபாஸ்ட் நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (புதன்) நான் பயனுள்ள சந்திப்புகளை நடத்தினேன். இந்தச் சந்திப்புகள் பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்கும். அதேபோல், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும். கடந்த ஐந்தாண்டுகளாக மாநில அரசில் ஊழல் இருந்து வந்தது. தற்போது ஒத்துழைப்பு தரும் அரசு உருவாகி இருக்கிறது. முன்பு அழிவு இருந்தது. தற்போது அந்த இடத்தில், முன்னேற்றம் வந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்து மாநிலத்தை விட்டு வெளியேறினார்கள். இதன் காரணமாக, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டது. இப்போது, ​​முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது மிகவும் முக்கியமானது.

மாநிலம் முழுவதும் நம்பிக்கையை பரப்பும் வகையில் நேற்றைய சந்திப்புகள் குறித்து செய்தியை பல்வேறு பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்பு, ஆந்திரப் பிரதேசம் வழங்கும் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகள் பற்றிய செய்தியைப் பரப்ப உதவியது. முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், நமது மாநிலம் முதலீட்டுக்கான நம்பகமான மற்றும் பாதுகாப்பான இடமாக உள்ளது. ஆந்திராவை நாட்டிலேயே நம்பர் 1 மாநிலமாக மாற்ற நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE