ஏ.சி., எல்இடி உற்பத்திக்கு சலுகை; விண்ணப்ப பதிவு வரும் 15-ம் தேதி மீண்டும் தொடக்கம்: மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2021-ம்ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஒப்புதல்வழங்கியது. ஜவுளி, தொலைத்தொடர்பு சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதுதான் இதன் நோக்கம்.

இதன்படி, ஏ.சி. மற்றும் எல்இடி விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ.6,238 கோடிஒதுக்கப்பட்டது. 2021-22 முதல்2028-29 வரையிலான 7 ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இதற்கான விண்ணப்பப் பதிவு இதுவரை 2 முறை நடைபெற்றது. இதுவரை,மொத்தம் ரூ.6,962 கோடி முதலீடுசெய்வதாக உறுதி அளித்து 66 நிறுவனங்கள் பிஎல்ஐ திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் 3-வது முறையாக விண்ணப்பப் பதிவு வரும் 15-ம் தேதி தொடங்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 90 நாட்களுக்குள் அதாவது வரும் அக்டோபர் 12-ம் தேதி வரை இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிறுவனங்கள் மட்டுமல்லாது ஏற்கெனவே இந்த திட்டத்தில் பயனடைந்து வரும் நிறுவனங்களும் (கூடுதல் முதலீடு செய்ய விரும்பும்) விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே பயனடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE