கிராமப்புற, நத்தம் நிலங்களின் பட்டா, சிட்டா, புல எல்லை வரைபடத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: கிராமப்புற, நத்தம் நிலங்களின் பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு, புலப்படம், நகர நில அளவை வரைபடம், புல எல்லை வரைபடம், புல எல்லை அறிக்கை ஆகியவற்றை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று நில அளவை துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக நில அளவை, நிலவரி திட்ட இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த சில ஆண்டுகளாக பல வகையான நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணைய வழியில் பராமரிக்கப்படுகின்றன. நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், நில அளவை, நிலவரி திட்ட துறையால் பல்வேறு இணையவழி சேவைகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், கிராமப்புறம், நகர்ப்புறம், நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ளவும், நில உரிமையாளர்கள் புல எல்லைகளை (F Line Measurement) அளந்து நில எல்லை காட்ட கோருவதற்கும் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

‘எங்கிருந்தும், எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையை பயன்படுத்தி கிராமப் புற, நத்தம் நிலங்களின் பட்டா, சிட்டா, ‘அ’பதிவேடு, புலப்படம் ஆகியவற்றையும், நில அளவை பதிவேட்டின் நகல், நகர நில அளவை வரைபடம்,புல எல்லை வரைபடம், புல எல்லை அறிக்கை (F Line Report) ஆகியவற்றையும் https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பட்டா மாற்ற விண்ணப்பத்தின் நிலையையும் இதில் அறியலாம்.

கிராம வரைபடங்கள், பழைய நில அளவை எண்களுக்கான புதியஎண்களின் ஒப்புமை விளக்க பட்டியல் (Correlation Statements) உள்ளிட்ட ஆவணங்களை https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE