இ
ரண்டு வாரங்கள். ஜாக் மாவைப் பொறுத்தவரை, நீ....ண்....ட பதினான்கு நாட்கள். சம்பளம் தரக்கூடப் பணம் இல்லை. எத்தனையோ கதவுகளைத் தட்டினார். திறக்கவில்லை. அப்போது ஒரு தொலைபேசி அழைப்பு. ஜோ! “நான் நாளைக்கு உங்களைப் பார்க்க வரலாமா?” முதலீடு கிடைக்கிறதோ இல்லையோ, ஜாக் மா, ஜோவை நண்பராக நினைத்தார். பணத்தைவிட நட்பை மதிப்பவரல்லவா? உடனே சம்மதித்தார். “தாராளமாக வாருங்கள் ஜோ.” “நான் தனியாக வரவில்லை. என் மனைவியும் என்னோடு வரலாமா?” ஜாக் மாவைப் பொறுத்தவரை ஆண்களும், பெண்களும் சரிநிகர் சமானம்.
வாழ்வில் ஒவ்வொரு முக்கிய முடிவு எடுக்கும்போதும், மனைவி காத்தியின் ஆலோசனையைக் கேட்பவர், அவரையும், இன்னும் ஐந்து பெண்மணிகளையும் சம கூட்டாளிகளாகச் சேர்த்துக்கொண்டிருப்பவர், இதற்கா மறுப்புச் சொல்லுவார்? ”கட்டாயம் அழைத்து வாருங்கள். நானும் காத்தியும், உங்கள் இருவரின் வருகைக்குக் காத்திருக்கிறோம்.” ஆனால், ஜாக் மா மனம் நிறையக் கேள்விகள் – அலுவலக வேலையாக வருபவர் ஏன் மனைவியைக் கூட்டிக்கொண்டு வர வேண்டும்? வெஸ்ட் லேக் போன்ற சுற்றுலா சுவாரஸ்யங்களைப் பார்க்க வாழ்க்கைத் துணையுடன் வருகிறாரோ? அதே சமயம், மனதில் நம்பிக்கை. ”நிச்சயமாகப் பணம் போடுவார்.
இல்லாவிட்டால் ஏன் திரும்பி வருகிறார்? பணம் அலிபாபாவுக்கு உடனடியாகத் தேவை. ஆனால், அதிக ஆர்வம் காட்டக்கூடாது. காட்டினால், எக்கச்சக்க நிபந்தனைகள் போட்டுவிடுவார். இது ஒரு சதுரங்க ஆட்டம். ஜோ அதிபுத்திசாலி. காய்களைக் கவனமாக நகர்த்தவேண்டும்.” ஜோ மனைவியுடன் வந்தார். ஜாக் மா மனைவி காத்தியுடன் அவர்களைச் சந்தித்தார். நாள் முழுக்க இருவரும் பேசிக்கொண்டார்கள். கொஞ்சம்கூட பிசினஸ் இல்லை. இருவரின் கடந்தகால வாழ்க்கை, கனவுகள், லட்சியங்கள்.....நெடுநாள் கழித்துச் சந்திக்கும் பால்யகால நண்பர்களைப் போல் கருத்துப் பரிமாற்றம். ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டார்கள். அடுத்த நாள். அதிகம் பேசியவர் ஜோ. எல்லாம் சொந்த விஷயங்கள். முதலீடு பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை.
தான் விடாக்கண்டனாக இருந்தால், இவர் கொடாக்கண்டனாக இருக்கிறாரே என்று ஜாக் மா மனதில் ஆச்சரியம். மூன்றாம் நாள். ஜாக் மா பொறுமை இழக்கத் தொடங்கினார். “இன்றாவது ஜோவிடம் பதில் வாங்கிவிடவேண்டும்.” வெஸ்ட் லேக்கில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தார். அவர், காத்தி, ஜோ, அவர் மனைவி. ஜோ துடுப்புப் போட்டார். படகு ஏரி நடுவில். ஜாக் மா முடிவு செய்தார், இனியும் தாமதிக்கக்கூடாது. என்ன பேசவேண்டும் என்று மனதில் வெள்ளோட்டம்.. தொண்டையைக் கனைத்துக்கொண்டார். அப்போது......ஜோ தன் துடுப்பைக் கையிலிருந்து கீழே போட்டார். படகு நின்றது. ஜோ தன் மனைவி முகத்தைப் பார்த்தார். பேசத் தொடங்கினார். “ஜாக் மா, உங்களிடம் ஒரு விஷயம் பேசவேண்டும். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்.” . ”நாம் இப்போது நண்பர்கள்.
என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.” சாதாரணமாகப் பதில் கொடுத்தாலும், ஜாக் மா லப் டப் எகிறிக்கொண்டிருந்தது. பாவி மனுஷன் என்ன சொல்லப்போகிறாரோ? அலிபாபாவின் நிகழ்காலம் ஜோ கைகளில். ”ஜாக் மா, நான் ஆழ்ந்து ஆலோசித்துவிட்டேன். என் மனைவியிடமும் பேசிவிட்டேன். என் ஹாங்காங் வேலையை ராஜினாமா செய்யப்போகிறேன்.” என்னிடம் ஏன் இதைச் சொல்லவேண்டும் என்று சந்தேகம். மரியாதைக்காகப் பதில் சொன்னார், ”உயர்ந்த பதவி. நல்ல சம்பளம். வேலையை விட்டுவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்?”
”ஜாக் மா, நான் அலிபாபாவில் வேலைக்குச் சேர விரும்புகிறேன். என்னை எடுத்துக்கொள்வீர்களா?”
ஜாக் மா, ஜோ முகத்தைப் பார்த்தார்.
ஜோக் அடிக்கிறாரோ? ஜோ சீரியசான ஆள். அவர் முகத்திலிருந்த உறுதி சொன்னது, சொல்வதெல்லாம் சத்தியம். அவர் மனைவி முகத்திலும் ஜாக் மா என்ன பதில் தருவார் என்னும் எதிர்பார்ப்பு. படகு கவிழ்ந்து. ஏரியின் ஜில் தண்ணீரில் தலை முழுகுவதுபோல் ஜாக் மாவுக்கு உணர்வு. ”ஜோ, விளையாடாதீர்கள். என்ன கேட்கிறோம் என்று தெரிந்துதான் கேட்கிறீர்களா? உங் கள் சம்பளம் இப்போது ஒரு லட்சம் யான்களை விட அதிகம். அலிபாபாவால் ஐநூறு யான்கள் தான் தர முடியும்.” “நான் பார்ப்பது வேலை. அலிபாபா ஒரு லட்சியப் பயணம். உங்களோடு சேர ஆசைப்படுகிறேன்.” ஜோவின் மனைவி கணவருக்காக வக்காலத்து.
”ஜாக் மா, இப்போது ஜோவை உங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளாவிட்டால், வாழ்நாள் முழுக்க வருத்தப்படுவீர்கள்.”
வேண்டுகோளா இது? நட்பு மிரட்டல்!
ஜாக் மா சிரித்துக்கொண்டே சொன்னார், “ஜோ, அலிபாபாவுக்கு உங்களை மனமார வரவேற்கிறேன்.
தன் கனவுகளைப் புரிந்துகொள்ளும், பகிர்ந்துகொள்ளும் புதிய சகா கிடைத்ததில் ஜாக் மாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி. ஜோவின் வேண்டுகோள் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தது உண்மை. ஆனால், அவர் உணர்ச்சி வேகத்தில் மட்டுமே முடிவெடுப்பவரல்ல. அந்த வேளையிலும், அவர் மூளை சுறுசுறுப்பாகக் கணக்குப்போட்டது. கம்பெனி உலக அளவில் வளரவேண்டுமானால், தொழில்நுட்பம் மட்டும் போதாது. நிதி நிர்வாகம், கம்பெனிகள் பற்றிய சட்ட அறிவு ஆகியவை அத்தியாவசியம். அலிபாபாவின் பதினெட்டு முதலாளிகளில் ஒருவருக்குக் கூட இந்தத் துறைகளில் அறிவோ, அனுபவமோ கிடையாது. இந்த வெற்றிடத்தை நிரப்ப அறிவு, திறமை, அனுபவம், நம்பகத்தன்மை, இவை அத்தனைக்கும் மேலாக அலிபாபாவின் பிரம்மாண்டக் கனவுகளில் நம்பிக்கை கொண்டவர் தேவை. இரண்டு நாட்கள் நெருங்கிப் பழகியதிலிருந்து ஜோ பொருத்தமானவர் என்று ஜாக் மாவுக்குத் தெரிந்தது. இதனால்தான், தன் படையில் வீரராக அவரை அனுமதித்தார்.
விரைவில், அலிபாபா குடும்பத்தில் ஜோ பத்தொன்பதாவது ஆள். மின்னல் வேகத்தில் செயல்படத் தொடங்கினார். அவருக்கும், ஜாக் மாவுக்கும் அத்தனை மனப் பொருத்தம். தலைவர் சொன்னதைத் தளபதி நடத்திக் காட்டினார். பல வேளைகளில் தலைவர் நினைத்து ஆனால் சொல்ல விட்டுப்போனதையும்.
18 கூட்டாளிகளுக்குமிடையே அலிபாபாவின் பங்குகள் பற்றிய எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதுவும் இருக்கவில்லை. முழுக்க முழுக்க வாய்மொழி வார்த்தைகள், ஜாக் மா மீதிருந்த நம்பிக்கை. கம்பெனி வளரவேண்டுமானால், எழுத்துவடிவ ஆவணங்கள் தேவை என்பதை ஜோ அனைவருக்கும் புரியவைத்தார். ஆவணங்களை உருவாக்கும் பணியை ஃபென்விக் அன்ட் வெஸ்ட் (Fenwick & West) என்னும் பிரபல சட்டக் கம்பெனியிடம் ஒப்படைத்தார். உலகத்தரத்தில் தயார் செய்தார்கள். ஃபீஸ் 20,000 டாலர்கள். ஒரே ஒரு பிரச்சனை – அலிபாபாவில் காசில்லை. ஜோ தன் சொந்தக் காசோலையைத் தந்தார். புதுமுகத்தின் அர்ப்பணிப்பைப் பார்த்த ஜாக் மா அசந்துபோனார்.
ஜோ கூட்டாளிகள் அனைவரையும் ஒன்றுசேர உட்காரவைத்தார். ஒப்பந்தம் ஏன் அவசியம் என்பதை விளக்கினார். ஜோ அயலாரல்ல, தங்கள் அலிபாபா குடும்பத்தில் ஒருவர் என்னும் பிணைப்பு அனைவருக்கும் வந்தது. தன் பழகும் தன்மையால் அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட ஜோவின் மிகப் பெரும் வெற்றி இது. நட்புவட்டத்தைத் தாண்டி ஜாக் மா செய்த முதல் நியமனம், இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடும் திறமையின் நிரூபணம்.
ஜாக் மாவுக்குத் தன்முனைப்பு அதிகம். பலவேளைகளில் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடிப்பார். ஜாக் மாவும், ஜோவும் துணிகர முதலீட்டாளர்களைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்தார்கள். இவர்கள் அத்தனை பேரும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்திலும், சுற்றுவட்டாரத்திலும் இருந்தார்கள். சந்திப்புக்கு, கனகச்சிதமான வருங்காலத் திட்டம், அடுத்த ஐந்து, பத்து வருட லாப / நஷ்ட எதிர்பார்ப்புக் கணக்குகள் ஆகிய முழு விவரங்களோடு போகவேண்டும் என்று ஜோ சொன்னார். முந்தைய வேலையில் முதலீட்டாளராக இருந்தபடியால், பணம் போடுபவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்னும் நாடித்துடிப்பு அவருக்கு அத்துப்படி. ஆனால், இந்த அணுகுமுறைக்கு ஜாக் மா சம்மதிக்கவில்லை. இது வெளியாட்களிடம் பிச்சை கேட்பதுபோல, தன் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல என்று நினைத்தார். சமமாக உட்கார்ந்து பேசவேண்டும். அவர்கள் பணம் பல மடங்கு வளரும் என்று திருப்திப்படுத்தினால் போதும் என்று பிடிவாதம் பிடித்தார். ஜோவின் எதிர்வாதங்களை அவர் கேட்டுக்கொள்ளவேயில்லை.
நாற்பது முதலீட்டாளர்களைச் சந்தித்தார்கள். ஜாக் மாவின் பேச்சுத்திறமைக்கு ஒருவர்கூட மசியவில்லை. அனைவரும் கதவை மூடினார்கள் – சிலர் நாசூக்காக, பலர் முரட்டுத்தனமாக. வெறும் கையும், கனத்த மனமுமாக ஜாக் மாவும், ஜோவும் ஹாங்ஸெள திரும்பினார்கள். காலமகள் கண் திறப்பாள், கவலைப்படாதே சகோதரா என்று ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டார்கள். அப்போது ஒரு குடுகுடுப்பைக்காரர் அலிபாபா அலுவலகம் முன்னால் வந்து சொல்லியிருக்கவேண்டும்.
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது
அலிபாபாக்காரருக்கு நல்ல குறி சொல்லு,
மலையாள பகவதீ, அந்தரி, வீரி, சண்டிகை சூலீ!
நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வந்தது!
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago