பருவநிலை சாதகமாக அமையாததால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி மந்தம்!

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: பருவநிலை சாதகமாக அமையாததால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி மந்த கதியில் உள்ளது. இதுவரை வெறும் 5 சதவீத உப்பு மட்டுமே உற்பத்தியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுக நேரி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. உப்பளங்களில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. மழையால் உருக்குலைந்தன: ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும்.

பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் நிறைவடையும். கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளங்கள் உருக்குலைந்தன. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு உப்பளங்களை சீரமைத்து உப்பு உற்பத்திக்கு தயார் படுத்தவே மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

இதனால் மே மாத தொடக்கத்தில் தான் உப்பு உற்பத்தி தொடங்கியது. அதுவும் தரமான உப்பு உற்பத்தி வரவில்லை. இதுவரை பருவ நிலை சாதகமாக அமையாததால் உப்பு உற்பத்தி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதத்தில் 50 சதவீதத்துக்கு மேல் உப்பு உற்பத்தியாகிவிடும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை 5 சதவீதம்அளவுக்கு தான் உப்பு உற்பத்தியாகியுள்ளது.

பருவநிலை சாதகமில்லை: இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க முன்னாள் செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது: கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழையால் இந்த ஆண்டுஏற்கெனவே உப்பு உற்பத்தி மூன்று மாதங்கள் தாமதம் ஆகிவிட்டது. தற்போது நிலவும் பருவநிலையும் உப்பு உற்பத்திக்கு கைகொடுக்கவில்லை. கடந்த 2 மாதங்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உப்பு உற்பத்திக்கான மேல்திசை காற்றும் சரியாக வீசவில்லை.

இதனால் இதுவரை 5 சதவீத உப்பு மட்டுமே உற்பத்தியாகியுள்ளது. தரமான உப்பு உற்பத்தி இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உப்பு உற்பத்தி நன்றாக இருந்தால், இன்னும் 40 சதவீதம் வரை உப்பு உற்பத்தியாக வாய்ப்பு இருக்கிறது. எப்படி பார்த்தாலும் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி அதிகபட்சம் 45 சதவீதம் தான் இருக்கும்.

கையிருப்பு இல்லை: உற்பத்திக்கான செலவும் வழக்கத்தைவிட 50 சதவீதம் கூடுதலாகி உள்ளது. வழக்கமாக ரூ.5 லட்சம் செலவாகும் நிலையில், இந்த ஆண்டு ரூ.8 லட்சம் வரை செலவு செய்யும்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ரூ.5 லட்சம் செலவு செய்தால் ரூ. 2 லட்சம் அளவுக்கு தான் வருமானம் கிடைக்கிறது. அடுத்து வரும் மூன்று மாதங்கள் உற்பத்தி நன்றாக இருந்தால் செலவு தொகையாவது கிடைக்கும்.

இல்லை என்றால் நஷ்டம் தான். தற்போது எந்த உற்பத்தியாளரிடமும் உப்பு கையிருப்பு இல்லை. உற்பத்தியாகும் உப்பை அப்படியே விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விலை ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது. ஒரு டன் உப்பு தரத்தை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.4,500 வரை விலை போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE