கோப்புப்படம் 
வணிகம்

விலை உயர்வை கட்டுப்படுத்த 71,000 டன் வெங்காயம் மத்திய அரசு கொள்முதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்தாண்டில் இதுவரை 71,000 டன் வெங்காயத்தை வாங்கி இருப்பு வைத்துள்ளது. இதுகுறித்து நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வெங்காய விலையை கட்டுப்படுத்த மொத்தம் 5 லட்சம் டன்வெங்காயத்தை மத்திய அரசுகொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைக்கும். அதில் இந்தாண்டில் ஜூன் 20-ம் தேதி வரை மத்திய அரசு 70,987 டன் வெங்காயத்தை கொள்முதல் செய்துள்ளது.

கடந்தாண்டு இதே காலத்தில் மத்திய அரசு 74,071 டன் கொள்முதல் செய்திருந்தது. ராபி பருவத்தில் வெங்காய உற்பத்தி 20 சதவீதம்குறைந்தபோதிலும், விலை உயர்வை கட்டுப்படுத்த கடந்தாண்டை விட இந்தாண்டில் வெங்காயத்தின் கொள்முதல் வேகமாக நடைபெற்றுள்ளது. 5 லட்சம் டன்வெங்காய கொள்முதல் இருப்பு என்ற இலக்கை நோக்கி கொள்முதல் நடைபெறுகிறது.

சந்தையில் வெங்காய விலைசீராக இருக்கும் விதத்தில், கிடங்குகளில் இருந்து வெங்காயத்தை விற்கவும், இருப்பு வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. தற்போது வெங்காயத்தின் சாரசரி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.40 ஆக உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT