மூ
ங்கில்கள் உலகத்தில் அதிவேகமாக வளரும் செடியினம். சிலவகை மூங்கில்கள் முளைத்த மூன்றே வாரங்களில் பத்தடி தொடும்; அதன்பின், நாளுக்கு மூன்றடியாக உயர்ந்து சுமார் 135 அடியை எட்டும். சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் இப்படித்தான் கிடுகிடு வளர்ச்சி. அலிபாபா தொடங்கிய ஏப்ரல் 1999 – இல் இன்டர்நெட் பயன்படுத்தியோர் 20 லட்சம் பேர்; அக்டோபரில் இந்த எண்ணிக்கை 40 லட்சம்; ஆண்டு முடிவில் 90 லட்சம். இன்டர்நெட் உலகின் முன்னோடியான யாஹூவைப்போல் சீன கம்பெனிகளும் புயல்வேக வளர்ச்சி காணும் என்னும் ஆசைக்கனவுகளோடு உலக முதலீட்டாளர்கள் சீனாவை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள்.
அமெரிக்காவில் உள்ள துணிகர முதலீட்டாளர்களின் வருகையை முதலில் அறுவடை செய்தவர் பீட்டர் யிப். இவர் ஒரு ஜகதலப்ரதாபன். 1999 – ஆம் ஆண்டு மே மாதம். சீனா இன்டர்நெட் கார்ப்பரேஷன் என்னும் கம்பெனி தொடங்கினார். அதன்கீழ், சீனா டாட்காம் (China.com) என்னும் இணையதளம். வெகு சாமர்த்தியமாக, China.com, Hongkong.com, Taiwan.com ஆகிய இணையதள பெயர்களைப் பதிவுசெய்து வைத்துகொண்டார். யிப் சீனக் குடிமகனேயல்ல. சிங்கப்பூர் பிரஜை. ஆனால், இந்தப் பெயர்களின் பலத்தால், சீன இன்டர்நெட் உலகின் முன்னோடி என்னும் பிம்பத்தை உருவாக்கிக்கொண்டுவிட்டார். சீன அரசு இந்த வலையில் விழுந்தது. ஜின்ஹூவா (Xinhua) என்னும் சீன அரசின் செய்தித்துறை யிப் உடன் கை கோர்த்தது. இந்த அங்கீகாரத்தால், அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான அமெரிக்கா ஆன்லைன் கம்பெனி சீனா இன்டர்நெட் கார்ப்பரேஷனில் 34 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தார்கள்.
யிப் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்பவர். ஜூலை மாதம், கம்பெனி பங்குகளை அமெரிக்க சந்தையில் இறக்கினார். (ஐ.பி.ஓ) கம்பெனி வருமானம் 4 மில்லியன் டாலர்கள். நஷ்டம் 9 மில்லியன் டாலர்கள். இந்த லாப நஷ்டக் கணக்கை யாருமே கண்டுகொள்ளவில்லை. பங்குகளுக்கு அமோக வரவேற்பு. 20 டாலர்களில் பங்குகள் தொடங்கின. முதல் நாள் முடிவில் விலை 67 டாலர்கள். கம்பெனி திரட்டிய தொகை 400 மில்லியன் டாலர்கள். சீன பிசினஸ் வரலாற்றில் எந்த நிறுவனமுமே இத்தனை பணம் திரட்டியதில்லை. கம்பெனி மதிப்பு 5,000 மில்லியன் டாலர்கள் என்று நிதி ஆலோசகர்கள் கணித்தார்கள். யிப் சொந்த மதிப்பு பல நூறு கோடி டாலர்கள்.
யிப் கண்ட வெற்றி ஜாக் மா மனதில் புது ரத்தம் பாய்ச்சியது. துணிகர முதலீட்டாளர்களிடம் பணம் வாங்கவேண்டும். கம்பெனி லாபம் பார்த்ததும் ஐ.பி.ஓ போகவேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். டாட்காம் யுகத்தில் ஐ.பி.ஓ வெற்றி பெற லாபம் தேவையில்லை என்னும் புதிய உண்மை அவருக்குப் புரிந்தது. ஆகவே, திட்டத்தில் மாற்றம். துணிகர முதலீட்டாளர்களின் பணம் கிடைத்தவுடன் சீக்கிரமே ஐ.பி.ஓ போய்விடவேண்டும்.
முரட்டுப் பிடிவாதம் பிடிக்காமல், ஜோ சொன்னபடி கேட்டிருந்தால், China.com - க்கு முன்பாகவே, அலிபாபாவில் பணம் கொட்டியிருக்கும் என்பதை ஜாக் மா உணர்ந்தார். அவர் தவறு செய்பவர்தான். ஆனால், தன் செயல்பாடுகளை அடிக்கடி நேர்மையாகச் சுய பரிசோதனை செய்துகொள்பவர். குற்றம் தன் பக்கம் என்று தெரிந்தால், துணிவோடு ஒத்துக்கொள்பவர், திருத்திக்கொள்பவர். இரண்டு கைகள் நான்கானால், இருவருக்கு மட்டுமல்ல, அலிபாபாவுக்கே ஒளிமயமான எதிர்காலம் என்பதை உணர்ந்தார். முதலீட்டுச் சமாசாரத்தை ஜோவுடன் சமமாகப் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தார். மாநாடுகளிலும், முதலீட்டாளர் கூட்டங்களிலும், சீன இன்டர்நெட்டின் இன்றைய நிலை, எதிர்காலம் ஆகியவை பற்றிய விசாலப் பார்வை ஜாக் மா வேலை. தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஜோ. பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளும் இந்தப் பாடம், அனைத்துத் தொழில்முனைவர்களும் கற்கவேண்டிய பாலபாடம் – திறமைசாலிகளைப் பணியில் அமர்த்தினால் மட்டும் போதாது, அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வாய்ப்புகள் தரவேண்டும்.
ஜோ ஆக்ஷன் ஸ்டார்ட். மகராஜன் திறமைசாலி மட்டுமல்ல, ராசியான ராஜா. அவர் அலிபாபாவில் கால்வைத்த நேரம் சுபயோக சுபதினம் என்று வந்த நாட்கள் நிரூபித்தன. பெரும்பாலான முதலீட்டாளர்கள் செம்மறியாட்டுக் கூட்டம். China.com - க்குப் பங்குச்சந்தையில் கிடைத்த வரவேற்பால், சீன இன்டர்நெட் கம்பெனிகளைத் துரத்தத் தொடங்கினார்கள். ஹாங்காங்கிலும், சீனாவின் முக்கிய நகரங்களிலும், முதலீட்டாளர்கள் – இன்டர்நெட் தொழில் முனைவர்கள் சந்திப்புகளும், கூட்டங்களும் நடத்தினார்கள். இவை அனைத்துக்கும் தவறாமல் அழைக்கப்பட்ட பிரபலம் – ஜாக் மா. பிசினஸில் ஜெயிக்கத் திறமை, உழைப்பு ஆகியவற்றோடு விளம்பர வெளிச்சமும் அவசியம் என்பது ஜாக் மாவுக்குத் தெரியும். அவர் அடிப்படையில் ஒரு ஷோமேன். பேசுவது அவருக்கு அல்வா சாப்பிடுவது. அதிலும், முதலீட்டை ஈர்க்கும் பேச்சு, திருநெல்வேலி அல்வா.
ஜாக் மாவின் பேச்சில் ஊடகங்கள் மயங்கினார்கள். பேட்டிகள், பேட்டிகள், பேட்டிகள். முதலில் வந்தவர் அமெரிக்காவின் பிரபல பிசினஸ் பத்திரிகையான பிசினஸ் வீக் பத்திரிகை நிருபர். ஜாக் மாவையும், சீனாவின் பிற இன்டர்நெட் தொழில் அதிபர்களையும் பேட்டி கண்டார். அட்டைப்படத்தில் ஜாக் மா. “இணையதள மாஸ்டர்” என்று பட்டம். அலிபாபாவில் முதலீடு செய்தால் China.com - ஐ விட அள்ள அள்ளப் பணம் கொட்டும் என்னும் ஜோசியம்.
ஸெளத் சைனா மார்னிங் போஸ்ட் (South China Morning Post) என்னும் ஹாங்காங்கின் புகழ்பெற்ற ஆங்கில நாளிதழில் ஒரு கட்டுரை. “ஜாக் மா வெறும் சீன பிசினஸ்மேன் அல்ல, அகில உலக இன்டர்நெட் சக்தி நிலையம் (Global powerhouse).” ஒரு பெட்டிச் செய்தியில் ஜாக் மா சொல்கிறார், “அலிபாபா சீனாவின் நம்பர் 1 ஆன்லைன் கம்பெனியானால் எங்களுக்குப் போதாது. உலகின் நம்பர் 1 ஆகவேண்டும்.” அடுத்த மாதச் சம்பளம் கொடுக்கக் காசு இல்லாத முதலாளியின் பேச்சு! வெத்துவேட்டல்ல, தன்னம்பிக்கை முழக்கம்.
இந்த ஊடக வெளிச்சங்களால், முதலீட்டாளர்கள் அலிபாபாவைப் புதிய பார்வையோடு கவனித்தார்கள். ஜோ இவர்களைச் சந்திக்கத் தொடங்கினார். இன்வெஸ்ட்டர் ஏபி நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவத்தால், முதலீட்டாளர்களோடு அவர்களின் அலைவரிசையில் அவரால் பேச முடிந்தது. டிரான்ஸ்பாக் (Transpac) என்னும் ஹாங்காங் நிதி நிறுவனத்தோடு வெற்றிகரமான முதல்கட்டப் பேச்சு வார்த்தைகள். அலிபாபாவுக்கு 7 மில்லியன் டாலர்கள் மதிப்புப் போட்டார்கள். ஜோவும், ஜாக் மாவும் சம்மதித்தார்கள். கடைசி நிமிடம். டிரான்ஸ்பாக், அலிபாபாவில் பெரும்பான்மைப் பங்குகள் கேட்டார்கள். ஜாக் மா மறுத்துவிட்டார். பணத்தைவிடச் சுயமரியாதை அவருக்கு முக்கியம்.
அடுத்ததாக எந்தக் கதவைத் தட்டலாம்? ஜோ தன் பழைய நண்பர்கள் பட்டியலைத் தூசு தட்டினார். தேடலில் கிடைத்தவர், ஷெர்லி லின். ஜோவைப் போலவே ஷெர்லியும் தைவானில் பிறந்தவர், அமெரிக்காவில் படித்துப் பட்டம் பெற்றவர். பத்து வருடங்களுக்கு முன்னால் இருவரும் அருகருகே இருக்கைகளில் விமானப் பயணம் செய்திருந்தார்கள். தங்கள் விவரங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். அதற்குப் பிறகு தொடர்பே இல்லை. கும்பிடப்போன தெய்வம் இப்போது குறுக்கே வந்தது. ஷெர்லி வேலை பார்த்தது, அமெரிக்காவின் பெரும் நிதி ஆலோசனை நிறுவனம் கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs). வேலை – சீனாவில் நம்பிக்கை நட்சத்திரமான நிறுவனங்களை அடையாளம் காணுதல். ஜோ பழைய தோழிக்கு அழைப்பு விடுத்தார். புத்திசாலியான ஜோ, தன் ஒரு லட்சம் யான்கள் சம்பாதித்த இன்வெஸ்ட்டர் ஏபி கம்பெனி வேலையை உதறிவிட்டு அலிபாபாவில் சேர வேண்டுமானால், இந்தப் புதிய கம்பெனியில் ஏதோ, ஏதோ இருக்கிறது என்று ஷெர்லி மனக்குறளி சொன்னது. அலிபாபா ``ஆபீசுக்கு” வந்தார். குடிசைத் தொழில் நடத்தும் இடம் போல் இன்டர்நெட் தொழில்நுட்பக் கம்பெனி! முதல் பார்வையில் அவநம்பிக்கை. சில மணிநேரங்கள் அங்கே செலவிட்டார். அத்தனைபேரும் புரட்சிகர இயக்கத்தின் போராளிகள்போல் வெறித்தனமாக உழைத்துக்கொண்டிருந்தார்கள். ஷெர்லிக்கு மூளைச்சலவை. இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் என்னும் முடிவு..
அலிபாபாவுக்கு ஷெர்லி போட்ட மதிப்பீடு 10 மில்லியன் டாலர்கள். கோல்ட்மேன் சாக்ஸ் 50 சதவீதப் பங்குகள் வாங்குகிறோம், 5 மில்லியன் டாலர்கள் தருவோம் என்று வாக்குறுதி கொடுத்தார். அமெரிக்கத் தலைமை அலுவலகத்துக்கு இதைச் சிபாரிசு செய்தார். இது மிக ரிஸ்க்கான விஷயம் என்று மறுத்த அவர்கள் 3.3 மில்லியன் மட்டுமே தந்தார்கள். 33 சதவிவீதப் பங்கு. இது ஜோவுக்கும், ஜாக் மாவுக்கும் ஏமாற்றம் தரலாம் என்று ஷெர்லி நினைத்தார். இதனால், தன் நண்பர்களிடம் பேசினார். இன்னொரு 1.7 மில்லியன் ஏற்பாடு செய்தார்.
தன் கடமையை முடித்த திருப்தி. ஷெர்லி குடும்பத்தோடு ஹாங்காங்கில் கடலில் நீந்திக்கொண்டிருந்தார். ஃபோன். அவசரம் அவசரமாகக் கரைக்கு ஓடிவந்து செல்போனை எடுத்தார். ஜாக் மா. சந்தோஷச் செய்தியை அவரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போது, பெரிய அலை அடித்தது. கையிலிருந்த செல்போனைத் தட்டிப் பறித்தது கடலில் காணாமல் போயிந்தி.
அரைகுறைப் பேச்சில் செல்போனை இழந்தது ஷெர்லியைப் பொறுத்தவரை அபசகுனம். அவர் மனதில் நடுக்கம் - அலிபாபாவுக்குக் கொடுத்த 5 மில்லியன் கோவிந்தாவாகப்போகிறதோ? .
ஜெயிக்கப்போவது எது? சகுனமா அல்லது ஷெர்லியின் நல்ல மனமா?
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago