ஏ
ப்ரல் 4, 1999. ஐந்து வருடங்களுக்கு முன்னால், 1994 – இல் ஜாக் மா ஹாங்ஸெள ஹைபோ மொழிபெயர்ப்பு ஏஜென்சி தொடங்கியபோது பட்டாசு வெடித்துக் கோலாகலத் திறப்பு விழா. அந்தக் கம்பெனியோடு ஒப்பிடும்போது, அலிபாபா மாபெரும் முயற்சி. ஆகவே, இப்போது, ஒரு பிரபலம் வந்து ரிப்பன் வெட்டியிருப்பார், வெடிச் சப்தத்தால் தெருவே அதிர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. பதினெட்டு பேரும் தங்கள் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தார்கள். வேலையைத் தொடங்கினார்கள். காரணம்? இந்த ஆடம்பரச் செலவுகளில் காசைக் கரியாக்க வேண்டாம், செய்யும் தொழிலே தெய்வம் என்று முயற்சியை ஒருமுகப்படுத்தினால், உலகமே அலிபாபாவைத் திரும்பிப் பார்க்கும் நாள் வரும் என்னும் தன்னம்பிக்கை.
தன்னம்பிக்கையைத் தன் சகாக்களுக்குத் தொற்றிக்கொள்ள வைத்தது ஜாக் மாவின் அபார சாதனை. சாதாரணமாக சீனர்கள் நாள் முழுவதும் தண்ணீருக்கு பதிலாக க்ரீன் டீ குடிப்பார்கள். மதியம் வயிறாரச் சாப்பிடுவார்கள். பெரும்பாலான ஆபீஸ்களில் சாப்பாட்டுக்குப் பின் தூங்குவதற்கான சோபாக்களும் இருக்கும். ஓய்வெடுத்துக்கொண்டால், புத்துணர்ச்சியோடு வேலை செய்வார்கள் என்பது சீன அனுபவம். ஆகவே, இந்தப் பழக்கங்கள் எழுதப்படாத சட்டம். ஜாக் மா அலிபாபாவில் இந்த நெறிமுறைகளை உடைத்தார். அவர் கூட்டாளிகளில் பன்னிரெண்டு பேர் ஆண்கள்; ஆறு பேர் பெண்கள். அத்தனை பெரும் கருமமே கண்ணாயினராக இரவும் பகலுமாக உழைத்தார்கள். தாகம் வரும்போது வெந்நீர் குடித்தார்கள். சாப்பாடு எப்போதும், மலிவான நூடுல்ஸ்தான். அலுவலகத்திலேயே வெறும் தரையில் தூங்கினார்கள். பேச்சும், மூச்சும், ஒவ்வொரு அசைவும் அலிபாபாதான்.
இதற்காக ஜாக் மா களத்தில் இறக்கியவை பல யுக்திகள். முன்னுதாரணமாக அவரே பசி, தூக்கம் மறந்தார். இரவு பகல் பாராமல் அவர்களோடு உட்கார்ந்து கம்ப்யூட்டரில் தரவுகளை ஏற்றினார். கஸ்டமர்களைத் தொடர்பு கொண்டார். தான் கம்பெனி தொடங்கியவன், பிறர் தன்னோடு சேர்ந்தவர்கள் என்னும் தன்முனைப்பு கொஞ்சமும் இல்லாமல் அத்தனை வேலைகளையும் செய்தார். தன் சகாக்களை ஒருசேர உட்காரவைத்து அலிபாபாவின் வருங்காலம் பற்றி விளக்கினார். தன் கருத்துகளைவிட யாருடைய கருத்துகளாவது சிறந்ததாக இருந்தால், அவற்றை ஏற்றுக்கொண்டார். முழுமனத்தோடு செயல்படுத்தினார்.
சிறு வயது முதலே, ஜாக் மாவுக்கு வீர தீரக் கதைகள் பிடிக்கும். சீனாவின் பிரபல எழுத்தாளர், ஜின் யாங் (Jin Yong) அவர் உள்ளம் கவர்ந்த படைப்பாளி. இப்போதைய 35 வயதிலும், ஜின் யாங் எழுதிய புன்முறுவல் பூக்கும் கர்வம் கொண்ட நாடோடி (The smiling, proud wanderer), புத்தகமும், வாளும் (The book and the sword), அரச குடும்ப ரத்தக்கறை படிந்த வாள் (Sword stained with royal blood), மேற்கத்தியக் காற்றில் கனைக்கும் வெள்ளைக் குதிரை (White horse neighs in the western wind) ஆகிய நூல்களைத் திரும்பத் திரும்பப் படித்துவந்தார். புன்முறுவல் பூக்கும் கர்வம் கொண்ட நாடோடி புத்தகத்தில் ஃபெங் கிங்யாங் (Feng Qingyang) என்னும் பாத்திரம். வாள்வீச்சும், குங்ஃபூவும் கற்றுத்தரும் ஆசிரியர். எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பார். இளைஞர்களுக்குத் தன் வித்தைகளை அற்புதமாகக் கற்றுத்தருவார். வாள்வீரன் என்னும் பெயரில் இந்தக் கதை சீனத் தொலைக்காட்சித் தொடராகவும் வந்து சக்கைபோடு போட்டது. ஜாக் மா தனக்கு ஃபெங் கிங்யாங் பெயரை வைத்துக்கொண்டார். எல்லோரும் இப்படித்தான் அவரை அழைக்கவேண்டும். மற்ற பதினேழு பேருக்கும், ஜின் யாங் புத்தகங்களில் வரும் சென் ஜியாலு (Chen Jialuo), ஹோகிங்டங் (Huoqingtong), கஸீலி (Kasili), டாயிஸ்ட் வச்சுன் (Taoist Wuchen), ஸாவோ பான்ஷன் (Zhao Bhanshan), வென் டெய்லாய் (Wen Tailai) போன்ற வீர, தீர சூரர்களின் பெயரைத் தன் சகாக்களுக்குச் செல்லப் பெயர்களாக வைத்தார். இப்படித்தான் அவர்களை அழைப்பார். இதனால், அவர்களுக்கு வேலை விளையாட்டானது. ஜாலியான ஜோலி. கடுமையாக உழைத்தார்கள்.
பிசினஸ் பற்றிய ஜாக் மாவின் சித்தாந்தம் வித்தியாசமானது. அன்றைய சீனாவில், பிசின்ஸ்மேன்களின் கொள்கை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வதுதான். தொழில்நுட்ப மாற்றங்களால், பிசினஸ்களின் வாழ்நாள் குறுகிவிட்டது. தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டேயிருந்தால்தான் நிலைக்க முடியும். இது சிரமமான காரியம். ஆகவே, தொழில் முனைவர்கள் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கும் குறுக்கு வழிகளைத் தேடத் தொடங்கினார்கள். தயாரிப்புப் பொருட்களின் தரம், வாடிக்கையாளர்கள் சேவை ஆகிய அம்சங்களைக் காவு கொடுக்கத் தொடங்கினார்கள். இந்தக் காலகட்டத்தில் ஜாக் மா அறிவித்தார், “அலிபாபாவின் லட்சியம் லாபமல்ல.” பெரும்பாலானோருக்கு இது புரியவில்லை. “பிசினஸ் தொடங்குவதே லாபம் பார்க்கத்தான். இவரெல்லாம் ஒரு தொழில் முனைவரா? இவர் நடத்துவது பிசினஸா அல்லது அறக்கட்டளையா?” என்று கேலி செய்தார்கள்.
ஜாக் மாவைப் பொறுத்தவரை, பிசினஸின் இலக்கு வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வது. இதை கனகச்சிதமாகச் செய்தால் அவர்கள் நம்மோடு நிலைத்திருப்பார்கள். தொழில் வளரும், லாபம் தானாக வரும். பெரும்பாலானோருக்கு இந்தச் சிந்தனை புரியவில்லை. ஜாக் மா தன் சகாக்களுக்கு விளக்கினார், “அலிபாபா லாபம் தேடும் வெறும் பிசினஸ் அல்ல. ஒவ்வொரு செங்கல்லும் திட்டமிட்டு, ஒழுங்குமுறையில் உருவாக்கப்படும் அமைப்பு. ஒவ்வொரு ஊழியரிடமும் உயர்ந்த பண்பாடுகளை மலரச் செய்து அவர்களின் வாழ்க்கைப் பாதையைச் சீராக அமைத்துக்கொடுப்பது நம் லட்சியம்.’’ தன் ஆளுமையால், தலைமையால், 17 கூட்டாளிகளையும் இந்தக் கொள்கைகளை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வைத்தார்.
அலிபாபாவின் மகிமையைச் செயலில் காட்டவேண்டும்; பணத்தையும், நேரத்தையும் வீணாக்கும் விளம்பரங்களிலும், தற்பெருமை முழக்கங்களிலுமல்ல என்பதில் ஜாக் மா தெளிவாக இருந்தார். அடக்கி வாசித்தார். அலிபாபா என்னும் கம்பெனி எங்கே இருக்கிறது என்று உள்ளூர்வாசிகளுக்கே தெரியாத அளவு அடக்கம். அதே சமயம், வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருக்கும் வாடிக்கையாளர்களை முதலில் குறி வைத்தார். இவர்கள் கைவசம் வந்துவிட்டால், சீன பிசினஸ்மேன்கள் தொடர்வார்கள் என்பது அவர் கணக்கு. உலக இணையதள அரங்கில் அலிபாபா என்னும் பெயர் பரிச்சயமாகத் தொடங்கியது. ஃபோர்ப்ஸ் (Forbes), நியூஸ்வீக் (Newsweek) ஆகிய அமெரிக்க முன்னணிப் பத்திரிகைகளில் அலிபாபா பற்றிய செய்திகள் வெளியாகத் தொடங்கின.
அமெரிக்காவில், பிசினஸ் வீக்லி (Business Weekly) என்னும் பத்திரிகை. சீனாவில் ஆன்லைன் கம்பெனியா என்று பிரமித்தார்கள். கம்பெனி சி.இ.ஓ – வைப் பேட்டி காண விரும்பினார்கள். இணையக் கம்பெனிகள் எங்கே இருக்கின்றன என்று கண்டுபிடிப்பது, வைக்கோல் போரில் குண்டூசி தேடுவதைப் போன்றது. திணறினார்கள். சீன அரசின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சரகத்தைத் தொடர்பு கொண்டார்கள். அலிபாபா அலுவலகத்துக்கு (ஜாக் மாவின் வீட்டுக்கு) நிருபர் வந்தார். வீடு முழுக்க ஆட்கள். கம்ப்யூட்டர்கள். தரையில் தூங்கும் சிலர். ``இதுவா அகில உலக ஆன்லைன் கம்பெனி?” என்று அவருக்குச் சந்தேகம்.
இத்தனை தூரம் அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டோம், பேட்டியை முடிப்போம் என்று ஜாக் மாவைச் சந்தித்தார். அமெரிக்கப் பத்திரிகை தங்களைப் பற்றி எழுதப்போகிறது என்றால், பிசினஸ்மேன்கள் க்யூவில் நிற்பார்கள். ஜாக் மா தந்தார் அதிர்ச்சி. நட்போடு பழகினார். ஆனால், பேட்டி தர மறுத்தார். அலிபாபா பற்றிய கட்டுரை வெளியாகக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். பிசினஸ் வீக்லி நிருபர் ஏமாற்றத்தோடு திரும்பினார். அவருக்கும், இந்தச் சேதி கேட்டவர்களுக்கும் ஜாக் மா கேரக்டரே புரியவில்லை – செலவே இல்லாமல் வரும் விளம்பரத்தை வேண்டாம் என்று மறுக்கும் மனிதரா? அமெரிக்கப் பத்திரிகைப் பேட்டிக்கான காலம் இன்னும் கனியவில்லை. சாதித்த பிறகு தானாகவே புகழ் வெளிச்சம் வரும் என்பது ஜாக் மா கணக்கு. .
மார்ச் 1999. கம்பெனி தொடங்கிய மூன்றாம் மாதம். எல்லா ஆரம்பத் தொழில்களுக்கும் வரும் பிரச்சினை. முதலீட்டுக் கையிருப்பு கரைந்துகொண்டே வந்தது. எப்படிப் பணம் புரட்டலாம் என்று ஜாக் மா ஆலோசித்தார். பல நம்பிக்கை வெளிச்சங்கள். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் சீன ஆன்லைன் பிசினஸ், பிரம்மாண்ட மக்கள் தொகை, வளரத் தொடங்கியிருக்கும் பொருளாதாரம், வேரூன்றத் தொடங்கியிருக்கும் இன்டர்நெட் பயன்படுத்துதல் ஆகியவற்றால் ஒளிமயமான எதிர்காலத்தைக் காணும் என்று கணித்த பல அமெரிக்கத் துணிச்சல் முதலீட்டார்கள் (Venture Capitalists) சீன இன்டர்நெட் கம்பெனிகளில் முதலீடு செய்ய முன்வந்துகொண்டிருந்தார்கள். சீனாவின் ஸினா (Sina) நிறுவனத்தில், அமெரிக்காவின் கோல்ட்மென் ஸாக்ஸ் (Goldman Sachs), ஜப்பானின் ஸாஃப்ட் வங்கி (Soft Bank) ஆகிய துணிகர முதலீட்டாளர்கள் 25 மில்லியன் டாலர்கள்; டோ ஜோன்ஸ் (Dow Jones), இன்டெல் (Intel) ஆகியோர் சீனமொழித் தேடுபொறிக் கம்பெனியான ஸோஹூ (Sohu) - வில் 10 மில்லியன் டாலர்கள் என முதலீடு செய்தார்கள். நெட் ஈஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய அமெரிக்காவின் ஏராளமான நிதி நிறுவனங்கள் வரிசையில் நின்றார்கள். அதன் முதலாளி சீன மகா கோடீஸ்வரர்களில் ஒருவர். பணம் கொட்டிக் கிடந்தது. ஆகவே, அவர்களின் கோரிக்கைக்கு நோ சொன்னார்.
அலிபாபாவுக்குப் பணம் புரட்ட இதுதான் பொன்னான நேரம். அலிபாபாவை நம்பிப் பணம் தரும் துணிகர முதலீட்டாளர்களை எப்படித் தொடர்பு கொள்ளலாம் என்று ஜாக் மா மூளையைக் குழப்பிப்கொண்டிருந்தார். அப்போது வந்தது ஹாங்காங்கிலிருந்து தொலைபேசி அழைப்பு. கூப்பிட்டவர் தன் மீட்பர் மட்டுமல்ல, வலது கையாக இருந்து அலிபாபாவின் தலையெழுத்தையே மாற்றி எழுத உதவப்போகிறவர் என்று அப்போது ஜாக் மாவுக்குத் தெரியாது. அவர்.......
(குகை இன்னும் திறக்கும்)
slvmoorthy@gmail.com
முக்கிய செய்திகள்
வணிகம்
3 hours ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago