பங்குச்சந்தை தாக்கம்: அதானி, அம்பானிக்கு ஒரே நாளில் பேரிழப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளானது இந்திய பங்குச்சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோர் தங்களது சொத்து மதிப்பில் பல கோடிகளை ஒரே நாளில் இழந்துள்ளனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் திங்கட்கிழமை அன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. செவ்வாய்க்கிழமை அன்று வெளியான தேர்தல் முடிவுகளால் பங்குச்சந்தை வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது. இன்று (புதன்கிழமை) சந்தை வர்த்தகம் சீரான ஏற்றம் கண்டுள்ளது.

இந்தச் சூழலில் இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் தொழிலதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் பெரிய அளவில் சரிவை ஏற்படுத்தி உள்ளது. ப்ளூம்பெர்க் தரவுகளின்படி கவுதம் அதானி, தனது சொத்து மதிப்பில் சுமார் 24.9 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். தற்போது 97.5 பில்லியன் டாலர்கள் அவரது சொத்து மதிப்பாக உள்ளது. முகேஷ் அம்பானி, சொத்து மதிப்பில் சுமார் 9 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். தற்போது 106 பில்லியன் டாலர்களை சொத்து மதிப்பாக அவர் கொண்டுள்ளார்.

புதன்கிழமை அன்று பங்குச்சந்தை சீரான ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆதாயம் அடைந்தனரா என்பது இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தின் நிறைவுக்கு பிறகே தெரியவரும்.

கவுதம் அதானி: துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கவுதம் அதானி. 61 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளார்.

முகேஷ் அம்பானி: பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவராக முகேஷ் அம்பானி உள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அவர் 11-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE