சென்செக்ஸ் 4,389 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நேற்றைய தினம் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 4,389 புள்ளிகள், நிஃப்டி 1,379 புள்ளிகள் சரிந்தன. மொத்த அளவில் சென்செக்ஸ் 5.74%, நிஃப்டி 5.93% சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு மாறாக தேர்தல் முடிவுகள் இருந்தது, பங்குச் சந்தை சரிவுக்கு காரணமாக அமைந்தது.

கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் வரையிலேயே வெல்லும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இதையடுத்து நேற்றுமுன்தினம் திங்கள்கிழமை பங்குச் சந்தை உச்சம்தொட்டது. சென்செக்ஸ் 2,507 புள்ளிகள்உயர்ந்து 76,469 ஆகவும், நிஃப்டி 733 புள்ளிகள் உயர்ந்து 23,264 ஆகவும் நிலைகொண்டன.

ஆனால், நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு மாறாக காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது.அதேபோல், பாஜக எதிர்பார்க்கப்பட்டஎண்ணிக்கையில் வெல்லவில்லை. இதையடுத்து பங்குச் சந்தைமளமளவென சரிய ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் சென்செக்ஸ் 6,100 புள்ளிகள் வரை சரிந்தது.

பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்றது உறுதியான பிறகு சற்று ஏற்றம் கண்டது. எனினும் ஒட்டுமொத்த அளவில் நேற்று பங்குச் சந்தை 5.74 சதவீதம் சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. திங்கள் கிழமை வர்த்தகத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ரூ.14 லட்சம் கோடி லாபம் ஈட்டியிருந்தனர்.

அதிகபட்சமாக நேற்று அதானி போர்ட்ஸ் 21.15%, அதானி எண்டர்பிரைசஸ் 19.31% சரிந்தன. அதைத் தொடர்ந்து ஓஎன்ஜிசி 16.83%, என்டிபிசி 15.45%, எஸ்பிஐ 14.40%, கோல் இந்தியா 13.75%, பிபிசிஎல் 12.90%, எல்அண்ட் டி 12.67%, பவர் கிரிட் கார்ப்பரேஷன் 12.35% என்ற அளவில் சரிவைக் கண்டன. அதேசமயம் ஹிந்துஸ்தான் யுனிலிவர் 5.96%, நெஸ்லே 3.09%,பிரிட்டானியா 3.04%, ஹீரோ மோட்டேகார்ப் 2.91% ஏற்றம் கண்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE